ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு பங்களா பணால்... இரவோடு இரவாக இடித்து தள்ள ஜெகன்மோகன் அதிரடி உத்தரவு!

By Asianet TamilFirst Published Jun 26, 2019, 7:55 AM IST
Highlights

கிருஷ்ணா நதிக்கரையோரத்தில் எந்தவிதமான கட்டிடங்களும் கட்டக் கூடாது என விதிமுறைகள் உள்ளன. அதை மீறி இந்தப் பிரமாண்ட கட்டிடத்தை, சந்திரபாபு அரசு கட்டியுள்ளது. இதில் காவல்துறை கலெக்டர்கள் மாநாடு நடக்கிறது. இதுதான் இங்கு நடக்கும் கடைசி கூட்டம். இதன்பிறகு இக்கட்டிடம் இடிக்கப்படும் என்று ஜெகன்மோகன் தெரிவித்தார்.

ஆந்திராவில் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் பங்களாவை இடிக்கும் பணிகள் இரவோடு இரவாக தொடங்கின.

 
சந்திரபாபு நாயுடு கடந்த 2014-ம் ஆண்டு முதல்வரானபோது விஜயவாடாவுக்கு அருகே அமராவதியில் புதிய தலைநகரை நிர்மானிக்கத் தொடங்கினார். விஜயவாடாவுக்கு அருகே குண்டூரில் உள்ள மங்களகிரி பகுதியில் உண்டவல்லியில் தன் வீட்டை மாற்றினார். இதற்காகத் தொழிலதிபர் ஒருவரின் வீட்டை ஆந்திர அரசு குத்தகைக்கு எடுத்தது. முதல்வர் அலுவலகமாகவும் செயல்பட்ட இந்த வீட்டில் ‘பிரஜா வேதிகா’ என்ற கூட்ட அரங்கமும் பின்னர் கட்டப்பட்டது.
இந்நிலையில் ஆந்திராவில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் சந்திரபாபு நாயுடு கட்சியான தெலுங்கு தேசம் படுதோல்வி அடைந்து, புதிய முதல்வராக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி பதவியேற்றார். தேர்தல் முடிவுகளுக்கு பிறகு சந்திரபாபு நாயுடு இந்த வீட்டை காலி செய்யவில்லை. இந்நிலையில்  ‘வீடு மற்றும் கூட்ட அரங்கை எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் தொடர்ந்து பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கோரி’ மாநில அரசுக்கு கடிதம் எழுதினார். ஆனால், அந்தக் கடிதத்துக்கு ஜெகன்மோகன் அரசு எந்தப் பதிலையும் சந்திரபாபுவுக்கு அளிக்கவில்லை.


இந்நிலையில் அமராவதியில் கலெக்டர்கள் மாநாடு முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் சில தினங்களுக்கு முன்பு  ‘பிரஜா வேதிகா' என்ற அரங்கில் நடந்தது. அப்போது பேசிய ஜெகன் மோகன். “முந்தைய அரசு கட்டிய அங்கீகாரமில்லாத கட்டிடத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கிறோம். கிருஷ்ணா நதிக்கரையோரத்தில் எந்தவிதமான கட்டிடங்களும் கட்டக் கூடாது என விதிமுறைகள் உள்ளன. அதை மீறி இந்தப் பிரமாண்ட கட்டிடத்தை, சந்திரபாபு அரசு கட்டியுள்ளது. இதில் காவல்துறை கலெக்டர்கள் மாநாடு நடக்கிறது. இதுதான் இங்கு நடக்கும் கடைசி கூட்டம். இதன்பிறகு இக்கட்டிடம் இடிக்கப்படும்” என்று தெரிவித்தார். 
முதல்வர் அறிவித்தபடி பிரஜா வேதிகா கட்டிடமும் அதன் அருகே உள்ள சந்திரபாபு நாயுடுவின் பங்களாவும் இடிக்கும் பணிகள் இரடுவோடு இரவாகத் தொடங்கின. அங்கே தெலுங்கு தேச தொண்டர்கள் குவிந்தததை அடுத்து போலீஸார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டனர். 

click me!