கர்நாடகாவுக்கு காவிரி ஆணையம் மீண்டும் உத்தரவு !! தமிழகத்துக்கு 40.43 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிட வேண்டும் !!

By Selvanayagam PFirst Published Jun 25, 2019, 10:41 PM IST
Highlights

பிலிகுண்டுலு பகுதியில் இருந்து ஜூன் மாதத்துக்கு 9.19 டிஎம்.சி. மற்றும் ஜூலை மாதத்துக்கு 31.24 டி.எம்.சி   என மொத்தம் 40.43 டிஎம்.சி தண்ணீரை  கர்நாடக அரசு தமிழகத்துக்கு திறந்து விட வேண்டும்  என்று காவிரி ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

காவிரி நீர் பங்கீட்டில் தொடர்புடைய தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களுக்கு இடையே நதிநீர் பங்கீட்டில் உள்ள பிரச்சினைகளை தீர்த்து வைக்க, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் அடிப்படையில் காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்றுக்குழு என்ற அமைப்புகளை மத்திய அரசு கடந்த ஆண்டு அமைத்தது. 

இந்த 2 அமைப்புகளிலும் 4 மாநிலங்களில் இருந்தும் தலா ஒரு அதிகாரி உறுப்பினராக உள்ளனர்.  இந்த 2 அமைப்புகளும் அவ்வப்போது கூடி அணைகளின் நீர் இருப்பு விவரங்களையும், நீர் பங்கீட்டு அளவு விவரத்தையும் விவாதித்து வருகின்றன. 

அந்த வகையில் கடந்த மாதம் 28-ந்தேதி நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில், குறுவை சாகுபடிக்காக தமிழகத்துக்கு 9.19 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடக அரசு திறந்து விட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. ஆனால் கர்நாடக அரசு இன்னும் இந்த வரையறுக்கப்பட்ட அளவு தண்ணீரை வழங்கவில்லை. 

இந்த தகவலை கடந்த 7-ந்தேதி நடைபெற்ற காவிரி ஒழுங்காற்றுக்குழு கூட்டத்தில் தமிழக அதிகாரிகள் பதிவு செய்தனர். ஆனால் கர்நாடக அரசுக்கு உத்தரவு பிறப்பிப்பதற்கான அதிகாரம் காவிரி மேலாண்மை ஆணையத்துக்கே உள்ளது என்பதால் கடந்த ஒழுங்காற்றுக்குழு கூட்டத்தில் அணைகளின் நீர் இருப்பு, நீர்வரத்து மற்றும் மழை பற்றிய புள்ளி விவரங்கள் மற்றும் தொழில்நுட்ப ரீதியிலான விஷயங்கள் மற்றும் தரவுகள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. 

இந்நிலையில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் அடுத்த கூட்டம் மீண்டும் இன்று நடைபெற்றது. தமிழகம் தரப்பில் தண்ணீர் திறந்துவிடக்கோரி  மீண்டும் வலியுறுத்தப்பட்டது. 

காவிரி மேலாண்மை ஆணையத்தின் 3–வது கூட்டத்தில் தமிழ்நாட்டுக்கு ஜூன் மாதத்துக்கு 9.19 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகம் திறந்து விட வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டது. 

ஆனால் இதுவரை உரிய அளவு தண்ணீர் திறக்கப்படவில்லை. எனவே இந்த மாத இறுதிக்குள் உரிய தண்ணீரை திறந்து விடுமாறு கர்நாடகத்துக்கு உத்தரவிட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. 

click me!