ஓய்வில் இருக்க வேண்டியவர் ஆய்வில் வந்து சிக்கிக்கலாமா..? ஆளுநர் பற்றி என்ன சொல்கிறார் தமிழிசை?

Asianet News Tamil  
Published : Dec 16, 2017, 03:30 PM ISTUpdated : Sep 19, 2018, 01:41 AM IST
ஓய்வில் இருக்க வேண்டியவர் ஆய்வில் வந்து சிக்கிக்கலாமா..? ஆளுநர் பற்றி என்ன சொல்கிறார் தமிழிசை?

சுருக்கம்

what thamizisai said about governor banwarilal purohit action in his recent tours


ஆளுநர் பன்வாரி லால் புரோஹித் தற்போது சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கிறார். அவர் மேற்கொண்ட ஆய்வுகள், பொதுமக்களிடம் பரவலாக வரவேற்பைப் பெற்றாலும், கட்சியினரிடையே கலக்கத்தையும் அதன் மூலம் காழ்ப்பையும் விதைத்திருக்கிறது. தாங்கள் செய்ய வேண்டிய வேலையை ஆளுநர் செய்கிறாரே என்று மக்கள் பிரதிநிதிகளுக்கும் உடன் கட்சிகளை நடத்திக் கொண்டு கட்டப் பஞ்சாயத்து செய்பவர்களுக்கும் கடுப்பைக் கிளப்பியிருக்கிறது. 

கோவையில் ஆய்வு செய்தபோதே  கடும் எதிர்ப்பைக் கிளப்பிய திமுக.,வினர், தொடர்ந்து நெல்லையிலும், குமரியிலும் சென்று ஆய்வு நடத்தி, புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு, மக்களிடம் குறைகளைக் கேட்டு வந்தார். அப்போதும் திமுக.,வினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். 

இந்நிலையில் கடலூருக்குச் சென்று ஆய்வு நடத்திய ஆளுநரை, எப்படியாவது இந்த ஆய்வுகளில் இருந்து தடுப்பதற்கான வேலைகளை திமுக.,வினரும் செய்துவந்தனர். எதிர்த்து கோஷமிட்டனர். மறியலில் ஈடுபட்டனர். கறுப்புக் கொடி காட்டினர். ஆனால், தனக்கு எதிராக கறுப்புக் கொடி காட்டிய திமுக.,வினர், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது நடவடிக்கை எதுவும் எடுக்க வேண்டாம் என்று ஆளுநர் போலீஸாரிடம் கூறிவிட்டாராம். 

இருப்பினும் தொடர்ந்து, ஏதாவது புகாரைச் சொல்லி அவரை நிறுத்த வேண்டும் என்ற முனைப்புடன் இருக்கும் போதுதான், கடலூரில் ஒரு சம்பவம் மாட்டியிருக்கிறது.

வழக்கம்போல், தூய்மை இந்தியா திட்டப் பணிகளை ஆய்வு செய்யப் போகிறேன் என்று திடீரென தனது வாகனத்தில் இருந்து இறங்கி ஒரு குடியிருப்புப் பகுதிக்குள் சென்ற ஆளுநர், ஏதோ ஒரு ஓலைத் தட்டி இருப்பதைக் கண்டு, அதை விலக்கி அங்கே அரசின் சார்பில் கட்டப்பட்டிருக்கும் கழிப்பறைகள் தகுதி, தரம் இவற்றைக் காணச் செல்வதாகப் போக, அந்த நேரத்தில் அந்தப் பகுதியில் ஒரு பெண் குளித்துக் கொண்டிருக்க, ஏதோ திடீரென எழுந்த சத்தமும், நடமாட்டமும் கண்டு அப்பெண் விறுவிறுவென துணிகளை எடுத்து மேலே போட்டுக் கொண்டு வீட்டுக்குள் ஓடிவிட... இப்படியாக நடந்த நிகழ்வு, திமுக.,வினருக்கு சாதகமாகப் போய்விட்டது. 

அடுத்து ஊடகங்களில் பெரும் பரபரப்பு. ஆய்வு மேற்கொள்ளச் சென்ற இடத்தில், ஒரு பெண் குளித்துக் கொண்டிருக்கும் போது, குளியலறையில் எட்டிப் பார்த்தார் ஆளுநர், அந்தப் பகுதியினர் கொந்தளிப்பு, புகார் என்றெல்லாம் செய்திகள், திமுக.,வினரின் தொடர்பில் உள்ள ஊடகங்களில் பரபரப்பாக, அடுத்த நிமிடமே அனைத்து ஊடகங்களும் அந்தச் செய்திகளைப் பரபரப்பின. 

இதனிடையே, இந்த விவகாரத்தில் ஆளுநர் மாளிகை விளக்கம் தந்ததுடன், இனி ஆளுநர் குறித்த செய்திகளை ஆளுநர் மாளிகையில் கேட்டு உறுதிப்படுத்திக் கொண்டு வெளியிடுங்கள் என்று சொல்லும் அளவுக்கு இந்த விவகாரம் மாறிப் போனது. 

இத்தகைய பின்னணியில்தான், ஓய்வில் இருக்க வேண்டிய ஆளுநருக்கு ஆய்வு எதற்கு? என்ற கோஷமும் திமுக., உள்ளிட்ட எதிர்க்கட்சிகளால் முன் வைக்கப்பட்டது. 

தங்கள் பகுதியான புதுச்சேரியில் ஒரு துணை நிலை ஆளுநரின் செயல்பாடுகளால் அரண்டு போயிருக்கும் புதுவை முதல்வர் நாராயணசாமியும் ஆளுநரின் ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேட்டி கொடுத்தார். 

இந்நிலையில்,  ஆளுநர் ஆய்வுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கருப்புக்கொடி காட்டியது கண்டிக்கத்தக்கது என்றும், ஆளுநரின் அதிகாரத்திற்கு உட்பட்டே அவர் செயல்படுகிறார் என்றும் பாஜக., தமிழகத் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் கூறியுள்ளார். 

ஆளுநர் ஆய்வு நடத்துவதால் மாநில சுயாட்சிக்கு எந்த ஒரு இழுக்கோ, பாதிப்போ இல்லை  என்று கூறிய அவர், ஆளுநருக்கு எதிராக திமுக, விசிகவினர் கருப்பு கொடி போராட்டம் நடத்தியதில் உள்நோக்கம் உள்ளது என்று கூறினார்.  

இருப்பினும், மத்திய அரசு அளிக்கும் திட்டங்கள், தமிழகத்தில் ஒழுங்காக செயல்படுத்து கிறார்களா என்பது போன்றவற்றை ஆய்வு செய்வதை நிறுத்தப் போவதில்லை,  இனியும் தான் ஓய்வில் இருக்கப் போவதில்லை என்றுதான் ஆளுநர் தன் தரப்பில் இருந்து வெளிப்படுத்தியிருக்கிறார்.

PREV
click me!

Recommended Stories

ஜோதிமணி மீது நடவடிக்கை பாயுமா? செல்வபெருந்தகையின் 'அடடே' விளக்கம்!
காங்கிரசை 'கை' கழுவிய மூத்த தலைவர்.. அடுத்த விக்கெட் காலி.. செல்வபெருந்தகை மீது பகீர் புகார்!