
அகமது எம்.பி. மரணம் குறித்த சந்தேகங்களை தீர்க்க வேண்டியது மத்திய அரசின் கடமை என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில குழு கூட்டத்தில் டி.ராஜா பேசினார்.
கடலில் எண்ணை படலம் :
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில குழு கூட்டம் கன்னியாகுமரி பெரியார் நகரில் நேற்று காலை 10 மணிக்கு தொடங்கியது. இந்த கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயலாளர் டி. ராஜா கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
சென்னையில் எண்ணெய் கப்பல்கள் மோதிக் கொண்டதில் வெளியான எண்ணெய் கசிவு பற்றி மாறுபட்ட கருத்துகள் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக நிபுணர்களை கொண்டு ஆய்வு நடத்தி உண்மையை வெளிக்கொணர வேண்டும்.
எண்ணெய் கசிவால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. கடல் வாழ் உயிரினங்கள் இறந்துள்ளன. பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் இதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மாநில அரசு, மத்திய அரசிடம் கூடுதல் நிவாரணத்தை கேட்டு பெற வேண்டும்.
கச்சத்தீவை மீட்க வேண்டும் :
தமிழக மீனவர் பிரச்சினைக்கு கச்சத்தீவு இலங்கைக்கு அளிக்கப்பட்டதே காரணம் ஆகும். கச்சத்தீவை மீட்டால் தமிழக மீனவர் பிரச்சனைக்கு தீர்வு ஏற்படும். இதுதொடர்பாக மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
5 மாநில தேர்தல் நடந்து வருகிறது. இந்த தேர்தலில் பா.ஜனதா தோற்கடிக்கப்பட வேண்டும். அந்த கட்சி வெற்றி பெற்றால் மாநில நலன் மட்டுமின்றி தேசிய நலனும் பாதிக்கப்படும். இதனை முன் நிறுத்தி தான் இந்திய கம்யூனிஸ்டு பிரசாரம் செய்து வருகிறது.
அகமது எம்.பி. மரணம் :
பாராளுமன்றத்தில் கேரள எம்.பி.யும், முன்னாள் மந்திரியுமான அகமது உரை நிகழ்த்தும்போது மயங்கி விழுந்து இறந்துள்ளார். அவருக்கு சிகிச்சை அளித்த ஆஸ்பத்திரியில் அகமது எம்.பி.யை சந்திக்க அவரது உறவினர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
இதில் பல்வேறு சந்தேகங்கள் கிளம்பி உள்ளது. இதுபற்றி பாராளுமன்றத்தில் நாங்கள் கேள்வி எழுப்பினோம். அகமது எம்.பி. மரணத்தில் நிலவும் புரியாத புதிர்களுக்கு மத்திய அரசு விடை அளிக்க வேண்டும்.
தமிழக அரசின் ஆலோசகராக செயல்பட்டு வந்த ஷீலா பாலகிருஷ்ணன் திடீரென விலகி இருப்பது குறித்து நான் எந்த கருத்தும் கூற விரும்பவில்லை.
இவ்வாறு டி.ராஜா கூறினார்.
தா.பாண்டியன்
முன்னதாக மாநில குழு கூட்டத்தில் கட்சி கொடியை முன்னாள் தமிழ் மாநில குழு செயலாளர் தா.பாண்டியன் ஏற்றி வைத்தார். அகில இந்திய பொதுச்செயலாளர் சுதாகர் ரெட்டி மாநாட்டை தொடங்கி வைத்தார். கூட்டத்துக்கு தமிழ் மாநில குழு செயலாளர் முத்தரசன், நல்லகண்ணு, மாநில துணை செயலாளர்கள் சுப்பராயன், வீரபாண்டியன், தேசியக்குழு உறுப்பினர் மகேந்திரன், முன்னாள் எம்.பி. அப்பாத்துரை, குமரி மாவட்ட செயலாளர் இசக்கி முத்து, தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற மாநில தலைவர் சொக்கலிங்கம் உள்பட 150-க்கும் மேற்பட்ட மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் தமிழகம் வறட்சியின் பிடியில் சிக்கி தவித்து வறுமையாலும், கடன் சுமையாலும் நூற்றுக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்வது பற்றியும், தமிழகம் முழுவதும் குடிநீர் பஞ்சம் வாட்டி வதைப்பது பற்றியும், ஜல்லிக்கட்டு போராட்டத்தில் காவல்துறையின் அடக்குமுறை பற்றியும் விவாதிக்கப்பட்டது. இன்றும் தொடர்ந்து கூட்டம் நடக்கிறது.