‘ உ.பி. மக்களே, ஊழல்வாதிகளை துரத்துங்கள் ’ சமாஜ்வாதி, காங்கிரஸ், மாயாவதி மீது பிரதமர் மோடி கடும் தாக்கு

Asianet News Tamil  
Published : Feb 04, 2017, 08:05 PM ISTUpdated : Sep 19, 2018, 03:03 AM IST
‘ உ.பி. மக்களே, ஊழல்வாதிகளை துரத்துங்கள் ’  சமாஜ்வாதி, காங்கிரஸ், மாயாவதி மீது பிரதமர் மோடி கடும் தாக்கு

சுருக்கம்

உத்தரப்பிரதேசத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டபின் முதல் முறையாக பிரசாரத்தை தொடங்கிய பிரதமர் நரேந்திர மோடி, ‘ உத்தரப்பிரதேச மக்களே, ஊழல்வாதிகளான சமாஜ்வாதி, அகிலேஷ் யாதவ், காங்கிரஸ், மற்றும் மாயாவதி ஆகியோரை துரத்துங்கள் என்று கடுமையாக தாக்கிப் பேசினார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில், 7 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் அறிவிக்கப்பட்ட பின் முதல்முறையாக பிரதமர் மோடி நேற்றுமீரட் நகரில் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

ஏறக்குறைய ஒரு மணிநேரம் தேர்தல் பொதுக்கூட்டத்தில் மோடி பேசினார். மாநிலத்தில் நிலவும் சட்ட ஒழுங்கு சீர்கேடு, ஊழல், ஆகியவற்றை குறிப்பிட்டு கடுமையாக விமர்சித்தார். அப்போது அவர் பேசியதாவது-

ஸ்கேம்-ஊழல்

உத்தரப்பிரதேசத்தில் ஊழல்வாதிகளை மக்கள் துரத்த வேண்டும். ஊழல் என்றால் ஆங்கிலத்தில் ‘ஸ்காம்’ என்பார்கள். இதில் எஸ்- எழுத்து சமாஜ்வாதியையும், சி- காங்கிரஸ் கட்சியையும், ஏ- அகிலேஷ் யாதவையும், எம்- மாயாவதியையும்குறிக்கும்.

புகலிடமா?

மக்கள் மாநிலத்தின் வளர்ச்சிக்காக பாரதிய ஜனதா கட்சியை தேர்வு செய்யப்போகிறார்களா? அல்லது கிரிமினல் குற்றவாளிகளுக்கு புகலிடம் அளிக்கப்போகிறார்களா?.

தடை

இந்த உத்தரப்பிரதேசம் தான் என்னை பிரதமராக ஆக்கியது. அந்த நன்றிக்கடனை நான் திருப்பிச் செலுத்த விரும்புகிறேன். அதற்கு ஒரே வழி மாநிலத்தில் பாரதியஜனதா அரசு வந்து, அது மத்திய அரசுடன் கைகோர்க்க வேண்டும். ஆனால், இப்போதுள்ள அரசு வளர்ச்சிக்கும், திட்டங்களை செயல்படுத்தவும் தடையாக இருக்கிறது.

காப்பாற்றுவார்களா?

காங்கிரஸ் கட்சியும், சமாஜ்வாதி கட்சியும் ஒருவரைஒருவர் விமர்சனம் செய்து வந்தநிலையில், ஒருநாள் இரவில் இருவரும் கூட்டணி அமைத்துவிட்டார்கள். தங்களையே பாதுகாக்கமுடியாதவர்கள் எப்படி, மாநிலத்தை காப்பாற்றப் போகிறார்கள்?.

விவசாயிகளுக்காக

நாங்கள்  பதவிக்கு வந்தவுடன், சிறு, குறு விவசாயிகளின் கரும்புக்கான கடனை தள்ளுபடி செய்வோம் என்று கூறினேன். அதேபோல், ஆட்சிக்கு வந்த 14 நாட்களில் தள்ளுபடி செய்தேன். ஏழைகளுக்காகவும், விவசாயிகளுக்காகவும் எனது ஆட்சி நடக்கிறது. சமீபத்தில் எங்கள் அரசின் பட்ஜெட்டும், விவசாயிகளுக்காகவும், நடுத்தர மக்களுக்காகவும் இருந்தது.

புரட்சி

ஆங்கிலேயர்கள் ஆட்சியில் சிப்பாய் புரட்சி 1857ம் ஆண்டு மீரட் நகரில் இருந்துதான் தொடங்கியது. அதுபோல் ஏழ்மை, ஊழல், நில அபகரிப்பாளர்களுக்கு எதிராக இங்கு போராட்டத்தை நான் தொடங்கி இருக்கிறேன்.

ஊழல்வாதி

கட்சியில் இருந்து தேர்தல் சீட்களை விற்பனை செய்து, அறையில் பணத்தை பதுக்கி இருப்பவர்கள் எல்லாம், நாங்கல் கொண்டு வந்த ரூபாய் நோட்டு தடையை அறிவிப்பை எதிர்த்து குரல் கொடுக்கிறார்கள். அவர்கள் ஒன்று சேர்வார்கள் என்று எனக்கு தெரியும்.

நிறுத்தமாட்டேன்

ஊழலும், கருப்பு பணமும் முடிவுக்கு வர வேண்டும் என்று மக்கள் நினைக்கிறீர்களா?, இந்த ஊழல்வாதிகளும், கொள்ளையர்களும் அடங்கும் வரை எனது போராட்டம் தொடரும். எத்தனை பேர் எனக்கு எதிராக திரண்டாலும், நான் எனது போராட்டத்தை நிறுத்தப்போவதில்லை. மோடி நிறுத்தமாட்டார்.

நீக்குங்கள்

உத்தரப்பிரதேசம் நாட்டின் முன்னணி மாநிலமாக இருந்தபோதிலும், வறுமை, வேலைவாய்ப்பின்மையால் தடுமாறுகிறது. பிரதமராக வந்தபின், கடந்த 2½ ஆண்டுகளாக ஏழைகள், விவசாயிகள், தலித்துகளுக்காக நான் நிறைய செய்து இருக்கிறேன். ஆனால், எனது திட்டங்களை செய்யவிடாமல் இங்கு உள்ள மாநில அரசு தடையாக இருக்கிறது.

இதுபோன்ற அரசை நீங்கள் வீட்டுக்கு அனுப்பாதவரை, வளர்ச்சி வேண்டும் என்று மத்திய அரசு நினைத்தாலும் அது நடக்காது. இதுபோன்ற மாநில அரசுகளை நீக்குவது அவசியம்.

மாநில அரசு எப்போது பார்த்தாலும், மாமா, சித்தப்பா, அப்பா என இதைச் சுற்றியே வருகிறது. நீங்கள் மாநிலத்தின் தலை எழுத்தை மாற்ற நினைத்தால், அரசை மாற்றுங்கள். உங்கள் வாக்கின் மூலம், ஊழலை துடைத்து எறியுங்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

PREV
click me!

Recommended Stories

DMK NDA Alliance : பாஜகவுக்கு ஓகே.. 22 எம்பிக்களுடன் காத்திருக்கும் திமுக.. தமிழக அரசியலில் திடீர் ட்விஸ்ட்.!
TN Politics: வன்னியரசு எனும் நான்.! யார் இந்த திருமாவின் படைத்தளபதி?!