உங்க திட்டம்தான் என்ன.? காங்கிரஸை குழியில் தள்ளி வளர நினைக்கிறீங்களா.? மம்தா தலையில் பலமாக குட்டிய சிவசேனா.!

By Asianet TamilFirst Published Dec 5, 2021, 9:04 AM IST
Highlights

காங்கிரஸ் தலைமையில் தேர்தலை சந்திக்க விரும்பவில்லை என்றால் அதை வெளிப்படையாக சொல்ல வேண்டும். இப்படி பல கருத்துக்களை வெளியிட்டு குழப்பத்தை ஏற்படுத்தக் கூடாது.

காங்கிரஸை முழுமையாக குழியில் தள்ளிவிட்டு, அதில் தாம் வளர வேண்டும் என பிறர் நினைப்பது சரியானது கிடையாது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை சிவசேனா விமர்சனம் செய்துள்ளது. 

2024-ஆம் ஆண்டில் பாஜகவை தோற்கடிக்க வேண்டும் என்பதில் எதிர்க்கட்சிகள் முனைப்புக் காட்டி வருகின்றன. இதற்காக காங்கிரஸ் தலைமையில் அணி அமைக்கும் முயற்சியை மம்தா பானர்ஜி, சரத் பவார் போன்ற தலைவர்கள் முயற்சித்தனர். ஆனால், காங்கிரஸ் தரப்பில் அந்த முனைப்பு இல்லை என்று கருதிய மம்தா பானர்ஜி, தன்னுடைய தலைமையில் எதிர்க்கட்சி அடங்கிய கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார். அதன் ஒரு பகுதியாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரேவை சந்திக்க மும்பை வந்தார் மம்தா பானர்ஜி. மும்பையில் பேட்டி அளிக்கும்போது, “ஐக்கிய முற்போக்கு கூட்டணி என்ற ஒன்று இல்லை.” என்று காங்கிரஸ் கட்சியை சீண்டினார். இதனால் கடுப்பான காங்கிரஸ், பாஜகவுக்கு மம்தா பானர்ஜி உதவுவதாக விமர்சித்தது.

இந்நிலையில் மம்தா பானர்ஜியை விமர்சித்து காங்கிரஸ் கூட்டணி கட்சியான சிவசேனா, அதன் கட்சி பத்திரிகையான ‘சாம்னா’வில் எழுதியுள்ளது. “'காங்கிரசை அழித்து அகற்றுவதற்கான நடவடிக்கைகளில் பாஜக ஈடுபட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே காங்கிரஸ் கட்சியும் சரிவை சந்தித்து வருகிறது. இதுபோன்ற ஒரு சூழலில் காங்கிரஸை முழுமையாக குழியில் தள்ளிவிட்டு, அதில் தாம் வளர வேண்டும் என பிறர் நினைப்பது சரியானது கிடையாது. காங்கிரஸ் கட்சியை எதிர்த்து செயல்படுவது என்பது பாஜக மற்றும் மதவாத சக்திகளுக்கு ஊக்கம் தருவதாக மட்டும் அமையும். காங்கிரஸ் கட்சி தலைமையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணிதான், பாஜகவை தேசிய அளவில் எதிர்க்க உள்ள ஒரே வாய்ப்பு ஆகும்.

காங்கிரஸ் தலைமையில் தேர்தலை சந்திக்க விரும்பவில்லை என்றால் அதை வெளிப்படையாக சொல்ல வேண்டும். இப்படி பல கருத்துக்களை வெளியிட்டு குழப்பத்தை ஏற்படுத்தக் கூடாது. பாஜகவை வெல்ல வேண்டும் என்றால், முதலில் எதிர்க்கட்சிகள் இடையே ஒற்றுமை வேண்டும். கூட்டணிக்கு யார் தலைமை தாங்குவது என்பதையெல்லாம் அதன்பின்னர் பார்த்துக் கொள்ளலாம். அதற்கு முன்பாக காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் தங்களுடைய நிலைப்பாடு என்ன, எதிர்கால திட்டம் என்ன என்பதையெல்லாம் திட்டவட்டமாக தெரிவிக்க வேண்டும்.” என்று சாம்னாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் சிவசேனா - காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கூட்டணி கட்சியான காங்கிரஸுக்கு ஆதரவாக சிவசேனா மம்தாவை விமர்சனம் செய்துள்ளது. 
 

click me!