BJP : “2022 எங்க கையில்..உ.பி மற்றும் பஞ்சாப் தேர்தல்..” புதிய திட்டத்தோடு களமிறங்கும் அமித்ஷா !

By Raghupati RFirst Published Dec 5, 2021, 8:30 AM IST
Highlights

அடுத்த ஆண்டு 2022 இல் உத்தரபிரதேசம் மற்றும் பஞ்சாப்பில் தேர்தல் வர உள்ளது. 

பஞ்சாப்பில் தற்போது காங்கிரஸ் கட்சியின் சரஞ்சித் சிங் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் கட்சிக்குள் அங்கு பெரிய அளவில் கோஷ்டி மோதல் நிலவி வருகிறது. முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங்குடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அவர் புதிய கட்சி தொடங்குவதாக அறிவித்துள்ளார். இன்னொரு பக்கம் சரஞ்சித் சிங்கிற்கும் மூத்த தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவிற்கும் இடையில் உரசல் நிலவி வருகிறது. இந்த பிரச்சனைகளுக்கு இடையில் ஆம் ஆத்மி கட்சியிலும் காங்கிரஸ் கட்சியினர் பெரும்பாலானோர் சேர்ந்து வருகின்றனர். 

அதுமட்டுமின்றி வரவிருக்கின்ற இத்தேர்தல் மூன்று முனை போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பஞ்சாபில் 2022ல் எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, கூட்டணிக்கு முன்னாள் முதல்வரும், பஞ்சாப் லோக் காங்கிரஸ் தலைவருமான அமரீந்தர் சிங், ஷிரேன்மணி அகாலிதல் முன்னாள் தலைவர் சுக்தேவ் சிங் திண்ட்ஸாவுடன் பாஜக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா தெரிவித்துள்ளார்.

இந்துஸ்தான் டைம்ஸ் தலைமைத்துவ உச்சி மாநாடு 2021 இல் தனது முக்கிய உரையைத் தொடர்ந்து ஒரு உரையாடலின் போது, ​​அமித்ஷா பஞ்சாப் மற்றும் உத்தரபிரதேசத்தில் தேர்தல்கள் பற்றி பேசினார் அமித்ஷா. அப்போது பேசிய அவர், ‘விவசாய சட்டங்கள் ரத்து செய்யப்பட்ட பிறகு, வேறு எந்த பிரச்சனையும் இல்லை. உத்தரப்பிரதேசத்தில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைக்கும்.

நாங்கள் கேப்டன் அமரீந்தர் சிங் மற்றும் முன்னாள் அகாலிதளம் தலைவர் சுக்தேவ் சிங் திண்ட்சா ஆகியோருடன் பேசுகிறோம். இரு கட்சிகளுடனும் நாங்கள் கூட்டணி வைப்பது சாத்தியம். இரு தரப்பினரிடமும் நேர்மறையான எண்ணத்துடன் பேசி வருகிறோம். மூன்று விவசாய சட்டங்களை ரத்து செய்ய பிரதமர் நரேந்திர மோடி பெரிய மனது காட்டினார். விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு பிரதமர் பெருந்தன்மை காட்டினார். 

இப்போது பஞ்சாபில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்று நினைக்கிறேன். தகுதி அடிப்படையில் தேர்தல் நடத்தப்படும். அரசியல் என்பது இயற்பியல் அல்ல, வேதியியல். இரண்டு கட்சிகளும் கைகோர்க்கும் போது அவர்களின் வாக்குகள் சேரும் என்பது என்னைப் பொறுத்தவரை சரியான அனுமானம் அல்ல. இரண்டு இரசாயனங்கள் இணைந்தால் மூன்றாவது இரசாயனம் உருவாகிறது. கடந்த காலத்தில் சமாஜவாதியும் காங்கிரஸும் கைகோர்த்ததையும், பின்னர் மூன்றும் (எஸ்பி, பிஎஸ்பி மற்றும் காங்கிரஸ்) இணைந்ததையும் நாம் பார்த்திருக்கிறோம், இருப்பினும்,  தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது.

மக்கள் விழிப்புணர்வுடன் உள்ளனர். வாக்கு வங்கியின் அடிப்படையில் உருவாகும் கூட்டணிகள் இப்போது மக்களை வழிநடத்த முடியாது. உத்தரபிரதேச தேர்தல் அமைப்பு பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான தர்மேந்திர பிரதான் மற்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் அரசியல் தலைமையின் கீழ் உபியில் தேர்தல்களுக்கான வேலைகள் நடைபெற்று  வருகிறது. உத்தரப்பிரதேசத்தில் பாஜக அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று என்னால் உறுதியாகக் கூற முடியும்” என்று ஷா கூறினார்.

click me!