மு.க.ஸ்டாலினுக்கு உதயநிதி போன் செய்து, சொன்ன கம்ப சூத்திரம் ரகசியம் என்ன..? அண்ணாமலைக்கு வந்த டவுட்..!

By Thiraviaraj RMFirst Published Jan 13, 2022, 2:12 PM IST
Highlights

தேர்தல் பிரச்சாரத்தில் பேசும்பொழுது எங்களிடம் ஒரு ட்ரிக் இருக்கிறது. எங்களிடம் ஒரு ரகசியம் இருக்கிறது. அதை நாங்கள் ஆட்சிக்கு வந்த உடனே உடைத்து விடுவோம் என்று சொன்னார்.

2006 முதல் 2011 திமுக ஆட்சியில் தான் தமிழகத்தில் அதிக தனியார் கல்லூரிகள் துவங்கப்பட அனுமதி கொடுக்கப்பட்டது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

’’தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உதயநிதிக்கு போன் செய்து, அவர் சொன்ன அந்த கம்ப சூத்திரம் ரகசியம் என்னவென்று கேட்க வேண்டும். ஏனென்றால், தேர்தல் பிரச்சாரத்தில் பேசும்பொழுது எங்களிடம் ஒரு ட்ரிக் இருக்கிறது. எங்களிடம் ஒரு ரகசியம் இருக்கிறது. அதை நாங்கள் ஆட்சிக்கு வந்த உடனே உடைத்து விடுவோம் என்று சொன்னார்.

அந்த ரகசியத்தை இன்றைக்கு நான் பார்க்கிறேன். ஒரு முதலமைச்சருக்கு பாரதப் பிரதமர் இடம் என்ன வேண்டுமானாலும் பேசுவதற்கு உரிமை இருக்கிறது. இதைத் தான் பேச வேண்டும், இதை பேசக்கூடாது என்று சொல்வது சரியாக இருக்காது. மருத்துவ கல்லூரி திறப்பு விழா நிகழ்ச்சியில் முதலமைச்சர் பேசும் போது முக்கியமாக ஒரு கருத்தைச் சொன்னார். 2006 சட்டமன்றத் தேர்தலின்போது திமுகவின் தேர்தல் அறிக்கையில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு மருத்துவ கல்லூரி என்பதுதான் எங்கள் கொள்கை என்று குறிப்பிட்டிருந்தார்.

ஆனால், 2006 முதல் 2014 வரை இந்த எட்டு வருடமாக அவர்களால் ஏன் அதை செய்ய முடியவில்லை? பாரத பிரதமர் மோடி அவர்கள் பேசும்போது இது குறித்து சுருக்கமாக சொன்னது என்னவென்றால், தனியார் வசம் இருந்த மருத்துவ படிப்பை உடைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளை உங்களுக்கு கொடுத்துள்ளோம். அதேபோல 2006 முதல் 2011 திமுக ஆட்சியில் தான் தமிழகத்தில் அதிக தனியார் கல்லூரிகள் துவங்கப்பட அனுமதி கொடுக்கப்பட்டது. அதனால் சொல்லுவது எல்லோருக்கும் எளிது. செய்வது தான் கடினம். 

இந்த காலத்தில் பெரிய பிரச்சினை என்னவென்றால் செய்வதுதான். பாரதிய ஜனதா கட்சி மறுபடியும் நாங்கள் சொல்லுகின்றோம் . நீட்டை பொருத்தவரை இருக்கக்கூடிய ஆதாரங்கள் அனைத்தும் மிகத் தெளிவாக இருக்கிறது. இது பிற்படுத்த மக்களுக்கு எதிரானது கிடையாது. எந்த சமுதாயத்திற்கும் எதிரானது கிடையாது. நீட் என்பது அதிகமாக கட்டணம் வாங்கக்கூடிய தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு மட்டுமே எதிரானது. தமிழ் மொழிக்கும், தமிழ் மக்களுக்கும் இது போன்ற தமிழை நேசிக்கும் பிரதமர் இதுவரை கிடைத்ததில்லை. தமிழகத்தில் கருத்து சுதந்திரம் கேள்விக்குறியாகி வருகிறது போலீசார் தங்கள் வேலையை விட்டுவிட்டு அரசை எதிர்த்து பேசுபவர்களை வழக்குப் போட்டு கைது செய்து வருகிறார்கள். காவல் துறையால் தேடப்படும் எந்த ஒரு குற்றவாளிக்கும் பாஜகவில் இடம் இல்லை. ’’ எனத் தெரிவித்துள்ளார்.

click me!