ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம் அவர்களும், எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் ஒற்றுமையாக இருக்கிறார்களா? யாருக்கும் புரியவில்லை. அதை உறுதி செய்த பின்பு தினம் அறிக்கைகள், அவ்வப்போது ஆர்ப்பாட்டங்கள் நடத்தி ஆளும் கட்சியினரை மிரள வைக்க வேண்டாமா? திமுக-வை எதிர்க்க உதித்ததுதான் அதிமுக.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைய தலைவருக்கு அமைச்சர் பதவி கொடுத்து அரசுப் பணிகளை பார்க்கும் அனுபவத்தை பெற்று தர ஏன் இன்னும் தயக்கம் என்று புரியவில்லை என பூங்குன்றன் தெரிவித்துள்ளார்.
என்ன தயக்கம்?
இதுதொடர்பாக ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றன் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில்;- திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைய தலைவருக்கு அமைச்சர் பதவி கொடுத்து அரசுப் பணிகளை பார்க்கும் அனுபவத்தை பெற்று தர ஏன் இன்னும் தயக்கம் என்று புரியவில்லை. இது அவருக்கு தகுந்த நேரம். அரசில் அனுபவம் பெறுவதற்கு அருமையான வாய்ப்பு. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை யாராலும் கணிக்க முடியவில்லை? வெவ்வேறு கணிப்புகள் உலா வந்து கொண்டிருக்கின்றன. என்ன நடக்கப் போகிறது என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். என் ஆசையெல்லாம் கட்சி தலைவர், தலைவியிடம் இருந்த மிடுக்கை பெற வேண்டும் என்பதுதான்.
ஆளும் கட்சியினரை மிரள வைக்க வேண்டாமா?
ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம் அவர்களும், எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் ஒற்றுமையாக இருக்கிறார்களா? யாருக்கும் புரியவில்லை. அதை உறுதி செய்த பின்பு தினம் அறிக்கைகள், அவ்வப்போது ஆர்ப்பாட்டங்கள் நடத்தி ஆளும் கட்சியினரை மிரள வைக்க வேண்டாமா? திமுக-வை எதிர்க்க உதித்ததுதான் அதிமுக. தொண்டர்கள் அப்படிதான் இன்றுவரை நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். தொண்டர்கள் விருப்பம் உங்கள் விருப்பமாக இருக்கவேண்டும்.
தியாகத்தலைவி வேண்டாமே? என்றதற்கு எத்தனை பேர் என்னை வசை பாடினார்கள். புரட்சித்தாய் என்ற பெயருக்கு ஏற்ப புரட்சி செய்ய வேண்டாமா? ஆன்மீக பயணம் எதற்கு? அரசியல் பயணம் மேற்கொள்ள என்ன தயக்கம். மற்றவர்களின் யோசனை உங்களுக்கு எதற்கு? சிங்கத்துடன் பயணித்துவிட்டு சீறிப் பாய வேண்டாமா? யாரை நம்பியும் நீங்கள் இல்லை உங்களை நம்பித்தான் மற்றவர்கள் பயணிக்கிறார்கள் என்பதை மனதில் கொண்டால் போதும்!
அற்புதமாக காய் நகர்த்தும் அண்ணாமலை
ஒருபக்கம் அண்ணாமலை அற்புதமாகக் காய்களை நகர்த்திக் கொண்டிருக்கிறார். ஆனால் ஒரு கை ஓசையை விட பல கைகள் இணைந்து ஓசை எழுப்பும் போதுதான் சப்தம் உரக்கக் கேட்கும். எனவே தகுதியானவர்களை பேச வைத்து தனது குரலுக்கு மேலும் வலு சேர்க்க வேண்டும் என்பதே இன்றைய தேவை. ராஜா அற்புதமாக செயல்படுகிறார் ஆனால் மந்திரிகளை காணவில்லையே என பூங்குன்றன் தெரிவித்துள்ளார்.