வேலூர் தேர்தல் தோல்வி... அதிமுக உள்ளூர் அமைச்சருக்கு எதிராகக் குற்றப்பத்திரிகை..?

By Asianet TamilFirst Published Aug 12, 2019, 8:34 AM IST
Highlights

தேர்தல் தோல்விக்கு வாணியம்பாடி தொகுதி முக்கிய காரணமாக அமைந்ததால், தற்போது அந்தத் தொகுதியின் எம்.எல்.ஏ.வும், அமைச்சருமான நிலோபர் கஃபீல் மீது அதிமுகவினருக்குக் கோபம் ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. 
 

வேலூர் தேர்தலில் அதிமுக நூலிழையில்  தோல்வியடைந்த நிலையில், உள்ளூர் அமைச்சருக்கு எதிராக அதிமுகவில் குற்றப் பத்திரிகை வாசிக்கப்பட்டுவருவதாகக் கூறப்படுகிறது.
வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி. சண்முகம் 8,141 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். மிக நெருக்கமாக வந்து தோல்வியடைந்ததை அதிமுக தலைவர்களால் ஜீரணிக்கவே முடியவில்லை. குறிப்பாக வாணியம்பாடி தொகுதியில்  அதிமுகவைவிட திமுக கூடுதலாக பெற்ற 22 ஆயிரம் வாக்குகள் அதிமுக தோல்வியடைய காரணமானது. வேலூரில் தேர்தல் அறிவிக்கப்பட்டவுடனே அந்த மாவட்டத்தைச் சேர்ந்த வணிகவரி துறை அமைச்சர் வீரமணி தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். அவருடைய  தலைமையில்தான் அதிமுகவைச் சேர்ந்த அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், கட்சி நிர்வாகிகள் பணியாற்றினர்.
தேர்தல் நேரத்தில் முத்தலாக் தடைச் சட்டத்தில் அதிமுகவின் இரட்டை நிலை பெரிய அளவில் விமர்சிக்கப்பட்டது. இதைச் சரி செய்ய அதிமுக தரப்பில் முயற்சி செய்யப்பட்டது. குறிப்பாக இஸ்லாமியர்கள் நிறைந்துள்ள வாணியம்பாடி, ஆம்பூர், வேலூர் தொகுதிகளில் இஸ்லாமிய பிரமுகர்களைச் சந்தித்து பேசி அதிமுக சமாதானம் செய்ய முயற்சித்ததாகக் கூறப்பட்டது. ஆனாலும் தேர்தல் தோல்விக்கு வாணியம்பாடி தொகுதி முக்கிய காரணமாக அமைந்ததால், தற்போது அந்தத் தொகுதியின் எம்.எல்.ஏ.வும், அமைச்சருமான நிலோபர் கஃபீல் மீது அதிமுகவினருக்குக் கோபம் ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. 
முத்தலாக் விஷயத்தில் வாணியம்பாடியில் இஸ்லாமிய பிரமுகர்களைச் சந்தித்து சமாதானம் செய்யும் பணி அவரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும், ஆனால், இஸ்லாமிய முக்கிய பிரமுகர்கள் நிலோபரை சந்தித்து பேச மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. தற்போது இந்த விஷயம்தான் அவருக்கு எதிராகக் கிளப்பிவிடப்படுகிறது. தன் சொந்த ஊரில் சொந்த சமூகத்தினரைக்கூட பேசி, சரி செய்ய முடியாத நிலையில் அமைச்சர் இருப்பதாக அதிமுக தலைமையிடம் குற்றப் பத்திரிக்கை வாசிக்கத் தொடங்கியிருப்பதாக வேலூர் அதிமுகவில் அடிப்படுகிறது.

 
விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். தங்களுடைய சொந்தத் தொகுதிகளில் செல்வாக்கு இல்லாத அமைச்சர்களை வைத்துக்கொண்டு தேர்தலைச் சந்தித்தால், உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுக்கு பாதகம் ஏற்படும் என்றும் அதனால் அதுபோன்ற அமைச்சர்களை நீக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுவருவதாக அதிமுகவில் பேச்சு அடிபடுகிறது. 

click me!