
சென்னை ஆர்,கே.நகர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் மதுசூதனன் தோல்வி அடைந்ததற்கு திமுகவும், டி.டி.வி.தினகரனும் கூட்டாக சேர்ந்து சதி செய்தது காரணம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துயை முதலமைச்சர் ஓபிஎஸ் கூறியுள்ளனர்.
ஆர்.கே.நகர் தொகுதியில் கடந்த 21 ஆம் தேதி நடந்த இடைத் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில் அதிமுகவை எதிர்த்து போட்டியிட்ட டி.டி.வி.தினகரன் 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாவத்தில் வெற்றி பெற்றார்.
இபிஎஸ்-ஓபிஎஸ் அணியினரிடம் கட்சி மற்றும் ஆட்சி இருந்ததது. அது மட்டுமல்லாமல் தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டு அந்த அணியினர் இரட்டை இலைச்சின்னத்தையும் பெற்றுவிட்டனர். இத்தனை இருந்தும் அதிமுக வேட்பாளர் மதுசூதனன், சுயேட்சையாக போட்டியிட்ட டி.டி.,வி.தினகரனிடம் தோற்றுவிட்டார். இது அதிமுகவினரிடையே பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் சென்னை ஆர்.கே.நகர் தேர்தல் முடிவு குறித்து அ.தி. மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இணைந்து அறிக்கை ஒன்றை வெயியிட்டுள்ளனர்.
அதில் தமிழகத்தில் இதுவரை எந்த ஒரு சட்டமன்ற தொகுதியிலும் சந்தித்திராத படுதோல்வியை ஆர்.கே.நகர் சட்டமன்ற இடைத்தேர்தலில் தி.மு.க. சந்தித்து இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
ஆர்.கே.நகர் தொகுதியில் தனக்கு இருக்கும் அடிப்படை வாக்குகளை கூட பெற முடியாத நிலை தி.மு.க.வுக்கு எப்படி ஏற்பட்டது என்பதை தமிழக மக்கள் வியப்புடன் நோக்குகிறார்கள் என்றும் அதேவேளையில், அதற்கு பின்னணியாக தி.மு.க.வும், டி.டி.வி.தினகரனும் சேர்ந்து செய்துள்ள கூட்டுசதியை அறிந்து, பதவி ஆசைக்காக இப்படியும் சதி செய்வார்களா? என்று தி.மு.க.வினரை நோக்கி தமிழக மக்கள்.கேள்வி எழுப்புவதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இரட்டை இலை சின்னத்தை தோற்கடிப்பதன் மூலம் ஒன்றுபட்டு அசைக்க முடியாத சக்தியாக நிற்கும் அ.தி.மு.க.வின் வெற்றி வாய்ப்பை எப்படியாவது பறித்துவிட வேண்டும். எம்.ஜி.ஆரின் செல்வாக்கிற்கும், ஜெயலலிதாவின் புகழுக்கும் , களங்கம் ஏற்படுத்தி விட வேண்டும் என்று தி.மு.க.வும், டி.டி.வி.தினகரனும் திட்டமிட்டு செய்த கூட்டு சதியின் வெளிப்பாடாக இந்த தேர்தல் முடிவு அமைந்து இருக்கிறது என குறிப்பிட்டுள்ளனர்.
தி.மு.க.வின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலினும், ஜெயலலிதா வாழ்ந்த போதும், வாழ்வுக்கு பின்னும், அவருக்கும், அ.தி.மு.க.வுக்கும் துரோகம் செய்து கொண்டிருக்கும் டி.டி.வி.தினகரனும் இணைந்து ஏற்படுத்திக்கொண்ட ரகசிய உடன்பாட்டின் விளைவுதான் ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் முடிவு என இபிஎஸ்-ஓபிஎஸ் கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது..
திருமங்கலம் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து, திருமங்கலம் பார்முலா என்ற புதிய சொல்லை தீய சக்தி தி.மு.க. உருவாக்கியது. அதேவழியில் இப்போது ஆர்.கே.நகரில் நூதனமுறையில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து தினகரன் பார்முலா எனும் தீயசொல்லை சசிகலா குடும்பத்தினர் உருவாக்கி இருக்கிறார்கள் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
தி.மு.க.வும், டி.டி.வி.தினகரனும் கூட்டு சதி செய்து, மக்களை ஏமாற்றி பெற்றுள்ள இந்த வெற்றி அ.தி.மு.க.வுக்கு எந்த ஒரு சரிவையோ, பின்னடைவையோ ஏற்படுத்தாது என தெரிவித்துள்ள இபிஎஸ்- ஓபிஎஸ் ஆகியோர் ,தொண்டர்களை பிளவுபடுத்தவோ, அ.தி.மு.க.வை யாரும் அசைத்துவிடவோ முடியாது என குறிப்பிட்டுள்ளனர்.