
கடந்த 2016ம் ஆண்டு பிரதமர் மோடி கொண்டு வந்த ரூபாய் நோட்டு தடையால் நாட்டின் பொருளாதாரத்தில் பாதிப்பு இல்லை என சாதகமான புள்ளி விவரங்களை அளிக்க மத்திய புள்ளியல் துறைக்கு மோடி அரசு அழுத்தம் கொடுத்தது, புள்ளிவிவரங்கள் அனைத்தும் போலியானவை, அதனால் நம்பாதீர்கள் என்று பா.ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி பகீர் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
தணிக்கையாளர்கள் கூட்டம்
குஜராத் மாநிலம், அகமதாபாத் நகரில் கணக்கு தணிக்கையாளர்கள் சார்பில் கூட்டம் நடந்தது. அதில் பா.ஜனதா மூத்த தலைவரும், எம்.பி.யுமான சுப்பிரமணிய சாமி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது-
போலியானவை
மத்திய அரசு அளிக்கும் காலாண்டு புள்ளி விவரங்களை யாரும் பின்பற்ற வேண்டாம். அனைத்தும் போலியானவை. என் தந்தைதான் மத்திய புள்ளியல் அமைப்பை உருவாக்கினார். சமீபத்தில், நான் மத்திய அமைச்சர் சதானந்தா கவுடாவைச் சந்தித்து பேசினேன்.
அழுத்தம்
அப்போது, அவர் மத்திய புள்ளியல் துறை அதிகாரியை அழைத்துப் பேசினார். அப்போது அவர், ரூபாய் நோட்டு தடையின் போது நாட்டின் பொருளாதார விவரங்களை நல்ல விதமாக, சாதகமாக அளிக்கவும், பாதிப்பு ஏதும் இல்லை எனவும் அறிக்க அளிக்க மத்திய அரசு அழுத்தம் கொடுத்தது என்றார்.
கேள்வி
எனக்கு இதைக் கேட்டவுடன் அதிர்ச்சி அடைந்துவிட்டேன். ஏனென்றால், ரூபாய் நோட்டு தடையின் பாதிப்பு என்னவென்று எனக்கு தெரியும். நான் உடனே, மத்திய புள்ளியல் துறை இயக்குரிடம் கேள்வி எழுப்பினேன்.
“ ரூபாய் நோட்டு தடை 2016ம் ஆண்டு நவம்பர் மாதம் அறிவிக்கப்பட்டது, ஆனால், நீங்கள் பொருளாதார ஆய்வறிக்கையை 2017ம் ஆண்டுபிப்ரவரி 1ந் தேதி அளித்துள்ளீர்கள். இந்த அறிக்கையை குறைந்த பட்சம் 3 வாரங்களுக்கு முன்பே தயாரித்து அச்சடிக்க வேண்டும்.
எப்படி கணக்கிட்டீர்கள்?
அதாவது, ஜனவரி முதலாவது வாரத்தில் நீங்கள் அறிக்கை அளித்து இருப்பீர்கள். ரூபாய் நோட்டு தடையால் பாதிப்பு இல்லை என பொருளாதார வளர்ச்சி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளீர்கள். எப்படி இதை கணக்கீட்டீர்கள்?
அவர் என்னிடம் கூறினால், முறை சாரா துறைகளின் கடந்த ஆண்டு புள்ளிவிவரங்களின் விகிதம், அமைப்புசார்ந்த துறைகளின் விகிதம் ஆகியவற்றை ஜனவரி மாதம் அமைப்பு சாரா துறையுடன் சேர்த்து கணக்கிடப்பட்டது.
நம்பாதீர்கள்
இப்படி கணக்கிட்டால் அனைத்திலும் வேறுபாடு வருமே? எனக் கேட்டேன். அதற்கு அவர், “ நான் என்ன செய்ய முடியும்?. ரூபாய் நோட்டு தடையால் பொருளாதாரத்தில் பாதிப்பு இல்லை என்று புள்ளி விவரம் அளியுங்கள், எனக்கு மத்திய அரசு சார்பில் அழுத்தம் கொடுக்கப்பட்டது. ஆதலால் நான் கொடுத்தேன்’ என்றார்.
ஆதலால், யாரும் மத்திய அரசு வெளியிடும் காலாண்டு பொருளாதார புள்ளிவிவரங்களை நம்பாதீர்கள்.
மூடிஸ், பிட்ச் அறிக்கை நம்பாதீர்கள்...
சர்வதேச கடன்மதிப்பீட்டு நிறுவனங்களான பிட்ச், மூடிஸ் ஆகியவை நாட்டின் பொருளாதார வளர்ச்சி கடந்த கடந்த 2017ம் ஆண்டு 5.7 சதவீதத்தைக் காட்டிலும், செப்டம்பர் காலாண்டில் 6.3சதவீதமாக உயர்ந்துள்ளது எனத் தெரிவித்தது. இதை குறிப்பிட்டு பேசிய சுப்பிரமணிய சாமி, “ பிட்ச், மூடிஸ் நிறுவனங்களின் அறிக்கையை நம்பாதீர்கள். அவர்களுக்கு பணம் கொடுத்தால், சாதகமான அறிக்கையை வௌியிடுவார்கள்’’ எனத் தெரிவித்தார்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.