
சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் அமோக வெற்றி பெற்றதையடுத்து, அதற்கான சான்றிதழை, தேர்தல் நடத்தும் அதிகாரி பிரவீன் நாயரிடம் இருந்து டி.டி.வி.தினகரன் பெற்றுக் கொண்டார்.
ஜெயலலிதா மறைவால் காலியான ஆர்.கே.நகர் தொகுதிக்கு கடந்த 21-ந்தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. அ.தி.மு.க. சார்பில் மதுசூதனன், தி.மு.க. சார்பில் மருது கணேஷ், பா.ஜ.க. சார்பில் கரு.நாகராஜன் ஆகியோரும், சுயேட்சை வேட்பாளராக சசிகலா உறவினர் டி.டி.வி. தினகரன் உள்பட 59 பேர் தேர்தல் களத்தில் நின்றனர்.
இந்த இடைத்தேர்தலில் மொத்தமுள்ள 2 லட்சத்து 28 ஆயிரத்து 234 வாக்காளர்களில் ஒரு லட்சத்து 76 ஆயிரத்து 885 வாக்குகள் பதிவானது. இது ஒட்டு மொத்தமாக 77.5 சதவீத வாக்குப்பதிவானதாக தேர்தல் ஆணையங்ம அறிவித்தது.
இந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. தொடக்கம் முதலே சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட டி.டி.வி.தினகரன் முன்னிலை பெற்றிருந்தார்.
இறுதியில் டிடிவி தினகரன் 89,013 வாக்குகள் பெற்று 40,707 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஆர்.கே.நகர் தொகுதியில் டிடிவி தினகரன் 50.32 சதவித வாக்குகளை பெற்று வெற்றியை தனதாக்கி உள்ளார். அவருடைய ஆதரவாளர்கள் வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.
இதையடுத்து வாக்கு எண்ணும் மையமான ராணி மேரி கல்லூரிக்கு வந்த டி.டி.வி.தினகரன், தான் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை தேர்தல் நடத்தும் அதிகாரி பிரவீன் நாயரிடம் இருந்து பெற்றுக் கொண்டார்.
தொடர்ந்து செய்தியாளார்களிடம் பேசிய அவர்,இது எம்ஜிஆர் - ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்களுக்கு கிடைத்த வெற்றி என்றும். எனது வெற்றிக்காக பாடுபட்ட அனைவருக்கும் நன்றி என்றும் கூறினார்.
எனது ஆதரவாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது கண்டனத்திற்குரியது என்றும் காவல்துறை நடுநிலையுடன் செயல்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.. ஆர்.கே.நகர் ஜெயலலிதாவின் தொகுதி, அவரின் தொண்டனாக மக்கள் என்னை தேர்வு செய்துள்ளனர். என்னை தவிர அனைவரும் டெபாசிட் இழப்பார்கள் என எதிர்ப்பார்த்தேன், ஒருவர் மட்டும் தப்பி பிழைத்துவிட்டார் என மதுசூதனனை கிண்டல் செய்தார்.
நம்பிக்கை வாக்கெடுப்பின்போது அனைத்து ஸ்லீப்பர் செல்களும் வெளியே வருவார்கள். ஆர்.கே.நகரில் வாக்களர்களுக்கு பணம் கொடுக்கவில்லை. வெற்றியை வழங்கிய ஆர்.நகர். தொகுதி மக்களை வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன் என்றார்.
சசிகலாவின் ஆலோசனை படி செயல்படுவேன் என்று தெரிவித்த டி.டி.வி.தினகரன், விரைவில் அவரை சந்தித்து வாழ்த்து பெறுவேன் என்றும் கூறினார்.