
திமுக- பாஜக மோதல்
தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்று 10 மாதங்கள் ஆன நிலையில், திமுக- பாஜக இடையே கடும் மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. மின் வாரியத்தில் திமுக தலைமைக்கு நெருக்கமானவர்கள் முதலீடு செய்திருப்பதாகவும் அந்த நிறுவனத்திற்கு டெண்டர் வழங்கப்பட்டிருப்பதாகவும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்திருந்தார். இதே போல முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துபாய் பயணத்தில் தனிப்பட்ட முறையில் முதலீடு செய்ய சென்றிருப்பதாக குற்றம்சாட்டியிருந்தார். இதனால் கடும் அதிருப்தி அடைந்த திமுக 610 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் கர்நாடக மாநிலத்தில் குமாரசாமி தலைமையிலான ஆட்சியை கலைக்க 360 கோடி ரூபாய் எடப்பாடி பழனிசாமி பாஜக தலைவர்களுக்கு வழங்கியாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றம்சாட்டியிருந்தார்.
அண்ணாமலைக்கு ஆளுநர் பதவி ?
இது போல திமுக- பாஜக இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ள நிலையில் இது தொடர்பாக கருத்து தெரிவித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தினமும் ஏதோ ஒன்றை உளறிக் கொண்டுள்ளார். தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் எல் முருகனுக்கு ஆளுநர் மற்றும் மத்திய அமைச்சர் பதவி கிடைத்தது போல தானும் பதவி பெறவே பாஜக தலைவர் அண்ணாமலை தினமும் திமுகவிற்கு எதிராக பேசி வருவதாக தெரிவித்தார். அந்தமானில் கவர்னர் பொறுப்பு வாங்கி விட வேண்டும் என்பதற்காக அண்ணாமலை துடிப்பதாக தெரிவித்தவர், ஆனால், பாஜக தலைவர் அண்ணாமலைக்கு தகுந்த இடம் திருவண்ணாமலை தான் என கூறினார். அங்கே தான் பல சித்தர்கள் இருக்கிறார்கள் அங்கே போய் இவரும் ஒரு சித்தராக இருக்கலாம் என விமர்சித்தார்.
பாஜக மாவட்ட கட்சி
தொடர்ந்து பேசியவர், வட மாநிலத்தை போல் தமிழகத்தையும் மாற்றி விடலாம் என அண்ணாமலை நினைப்பதாக தெரிவித்தவர், 150 ஆண்டுகள் அரசியலை பின்பற்றுகிற மாநிலம் தமிழகம் என கூறினார். குஜராத், உத்திரபிரதேச மாநில மக்கள் போல் இல்லாமல் தமிழக மக்கள் விழிப்புணர்வோடு இருப்பதாகவும் தெரிவித்தார். தமிழகத்தை பொறுத்தவரை 3 வது பெரிய கட்சி காங்கிரஸ் தான் என கூறியவர், பாரதிய ஜனதா கட்சி மாநில கட்சி அல்ல அது ஒரு மாவட்ட கட்சி என விமர்சித்தார். தமிழகத்தில் கவர்னரின் செயல்பாடுகள் மிகவும் மோசமாக உள்ளதாக தெரிவித்தவர், நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானத்தை குடியரசு தலைவருக்கு கூட அனுப்ப மறுத்தவர் தமிழக ஆளுநர் ரவி என குற்றம்சாட்டினார். அரசியல் சாசனத்தின் படி நடக்க தெரியாமல், தான்தோன்றி தனமாக தமிழக ஆளுநர் ரவி செயல்பட்டு வருவதாகவும் விமர்சித்தார்.