சென்னை ஐஐடி என்ன மர்ம வளாகமா? கொந்தளிக்கும் சு.வெங்கடேசன்..!

By vinoth kumarFirst Published Jul 2, 2021, 6:06 PM IST
Highlights

உண்மையை ஊற்றி மூடாத நம்பகத் தன்மை கொண்ட நல்ல மனிதர்களைக் கொண்ட உயர் மட்ட குழு ஒன்று ஐ. ஐ. டி மர்மங்களை விசாரித்து வெளிக்கொண்டு வர வேண்டும் என தமிழக அரசுக்கு சு.வெங்கடேசன் எம்.பி கோரிக்கை வைத்துள்ளார்.

உண்மையை ஊற்றி மூடாத நம்பகத் தன்மை கொண்ட நல்ல மனிதர்களைக் கொண்ட உயர் மட்ட குழு ஒன்று ஐ. ஐ. டி மர்மங்களை விசாரித்து வெளிக் கொண்டு வர வேண்டும் என தமிழக அரசுக்கு சு.வெங்கடேசன் எம்.பி கோரிக்கை வைத்துள்ளார்.

இது தொடர்பாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- சென்னை ஐ. ஐ. டி யின் பொருளாதார உதவிப் பேராசிரியர் விபின் புதியாத் விட்டில் என்பவரின் பணி விலகல் கடிதம் ஒன்று வைரல் ஆகி வருகிறது. சாதிய ரீதியான பாகுபாடுகளை எதிர் கொள்ள வேண்டி இருந்ததே காரணம் என்கிறது அவரது கடிதம். 2019ல் தான் அவர் ஐ. ஐ. டி உதவி பேராசிரியர் நியமனம் பெற்று பணியில் சேர்ந்துள்ளார். எவ்வளவு கனவுகளோடு ஐ. ஐ. டி வளாகத்திற்குள் அடியெடுத்து வைத்திருப்பார்! அமெரிக்காவின் ஜார்ஜ் மேசான் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். 

அண்மையில் 'கோவிட்‌ ஊரடங்கின் பொருளாதார தாக்கங்கள்' பற்றி ஒரு கூட்டு ஆய்வுத் தாளை வெளியிட்டு இருந்திருக்கிறார். ஆனால். இவ்வளவு ஆற்றல் மிக்கவரை சாதி துரத்தி இருக்கிறது.  இரண்டாண்டுகள் கூட அந்த மாநில வளாகத்திற்குள் அவரால் நீடிக்க இயலவில்லை. ஒரு வேளை அவரின் ஆற்றல்தான் காரணமோ! ஏகலைவனின் பிரச்சினையே அவனின் ஆற்றல்தானே! 2019 ல்  ஒரு மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை செய்து கொண்ட போது மத பாகுபாடுகள்தான் தனது துயர முடிவுக்கு காரணம் என்ற குற்றச் சாட்டு எழுந்தது. 

ஐ. ஐ. டி என்ன மர்ம வளாகமா? உடன் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம்/ எஸ். சி, எஸ். டி ஆணையம் தலையிட வேண்டும். இந்த செய்தியை புகார் ஆக எடுத்துக் கொண்டு ஐ. ஐ. டி யில் நிலவுகிற ஒட்டு மொத்த சூழலையும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். தமிழக அரசின் காவல் துறை விசாரணை மேற்கோள்ள வேண்டும். ஐ. ஐ. டி க்கு வெளியே இருந்து 'உண்மையை ஊற்றி மூடாத' நம்பகத் தன்மை கொண்ட நல்ல மனிதர்களைக் கொண்ட உயர் மட்ட குழு ஒன்று ஐ. ஐ. டி மர்மங்களை விசாரித்து வெளிக் கொண்டு வர வேண்டும். விபின் கடிதத்தின் கடைசி வரியில் உள்ள கேள்வி. 'சமூகம் இந்நேரத்தில் ஒரு சின்ன அடியாவது முன்னேறுகிறது.. இல்லையா?' வலி நிறைந்த கேள்விக்கு அவ் வளாகம் பதில் சொல்ல வேண்டும் என கூறியுள்ளார்.

click me!