யார் இந்த அசோக்குமார்.?செந்தில் பாலாஜி சகோதரரின் முழு பின்னனி என்ன.? வருமான வரி சோதனையில் ஆவணங்கள் சிக்கியதா.?

By Ajmal Khan  |  First Published May 28, 2023, 5:05 PM IST

அமைச்சர் செந்தில் பாலாஜியின் உறவினர்கள் மற்றும் நண்பர்களில் இல்லங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வரும் நிலையில், அதிகளவு அடிபடும் பெயர் அசோக்குமார். யார் இந்த அசோக் குமார் என அரசியல் வட்டாரத்தில் கேள்வி எழுப்பியுள்ளது.


வருமான வரி சோதனை

அமைச்சர் செந்தில் பாலாஜியின் உறவினர்கள், நண்பர்கள் என 40க்கும் மேற்பட்ட இடங்களை சுற்றி வளைத்து வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டு வருகிறது. இதில் கரூர் ராமகிருஷ்ணபுரத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் குமாரின் வீட்டுக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் சென்ற தகவல் வெளியானதும், கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் அங்கு குவிந்தனர். இதனையடுத்து தான் அந்த பகுதியில் வருமான வரித்துறை வாகனம் அடித்து உடைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

Tap to resize

Latest Videos

இந்தநிலையில் யார் இந்த அசோக்குமார் என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் அதிகமாக விசாரிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில்  கரூர் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரப்பட்டி என்னும் கிராமத்தில் பிறந்தவர் அசோக்குமார், செந்தில் பாலாஜியின் சகோதரரான அசோக்குமார்,  செந்தில் பாலாஜியின் அரசியல் பயணத்தில் முக்கிய நபராக இருந்து வருகிறார்.

போக்குவரத்து துறையில் முறைகேடு

2006ஆம் ஆண்டில் கரூர் சட்டமன்றத் தொகுதியில் இருந்து முதல் முறையாக செந்தில் பாலாஜி எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனையடுத்து மீண்டும் 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றவருக்கு போக்குவரத்து துறை அமைச்சர் பதவி வழங்கினார் ஜெயலலிதா, அந்த கால கட்டத்தில் போக்குவரத்து துறையில் பணி மாறுதல், போக்குவரத்து துறையில் புதிய பணி நியமனம் வழங்குவது என பல கோடி ரூபாய் முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது. அந்த புகாரிலும் அசோக்குமாரின் பெயரை தான் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த வழக்கு தான் தற்போது உச்சநீதிமன்றம் மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டுள்ளது.

 மேலும் டிக்கெட் விநியோகம் செய்யும் இயந்திரம் வாங்கியதிலும் முறைகேடு என செந்தில் பாலாஜ மீது புகார் கூறப்பட்டது. இந்தநிலையில் 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் நேரத்தில் அரவங்குறிச்சியில் தொகுதியில் அதிகளவு பணப்பட்டுவாடா காராணமாக தேர்தல் நிறுத்தப்பட்டது. அப்போதும் செந்தில்பாலாஜிக்காக பணம் பட்டுவாடா செய்ததில் முக்கிய நபராக அசோக்குமார் செயல்பட்டதாக கூறப்படுகிறது.  அதிமுகவில் இருந்து திமுக சென்ற போதும் செந்தில் பாலாஜியின் நிழலாக தொடர்ந்த அசோக்குமார்,  பொதுக்கூட்டங்களுக்கு கூட்டத்தை சேர்ப்பது என அனைத்து பணிகளையும் கவனித்ததாக சொல்லப்படுகிறது. 

டாஸ்மாக் மதுபான விற்பனையில் மோசடி

2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலிலும் எம்எல்ஏவாக தேர்வான செந்தில் பாலாஜிக்கு மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு துறை ஒதுக்கப்பட்டது. அப்போது மின்சார வாரியத்தில் உதவிப் பொறியாளர்கள் 248 பேர் ஒரே மூச்சில் இடமாற்றம் செய்யப்பட்டனர். இதில் எந்த விதிமுறைகளும் கடைபிடிக்கப்படாமல் பணம் கொடுப்பவர்களுக்கு இடமாறுதல் வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதில் முழுக்க முழுக்க அசோக்குமார் பெயரையே தலைமைசெயலக வட்டாரங்கள் கூறியது.  இதனையடுத்து மதுபானங்களுக்கு முறையான வரி செலுத்தாமல் கள்ள சந்தையில் விற்கப்படுவது, ஒவ்வொரு டாஸ்மாக்கிலும் ஒரு குவாட்டர் பாட்டில் விலை 10 ரூபாய் கூடுதலாக விற்கப்படுவதாகவும் புகார் வந்தது. இது எல்லாம் கரூர் கம்பெனி ஆட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு வழங்கிய உத்தரவு தான் காரணம் என கூறப்படுகிறது. 

முக்கிய ஆவணங்கள் சிக்கியதா.?

தமிழகம் முழுவதும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வரும் நிலையில் இதில் முக்கிய நபராக இருக்கும் அசோக்குமார் மட்டும் எங்கே இருக்கிறார் என்ற தகவல் வெளியாகமல் மர்ம்மாக இருந்தது. இது தொடர்பான தகவலை விசாரித்த போது அசோக்குமார் தற்போது டெல்லியில் இருப்பதாக கூறப்படுகிறது. அங்கிருந்து வருமான வரித்துறை சோதனை தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து சட்ட வல்லுநர்களோடு ஆலோசித்து வருவதாக தெரிகிறது. எனவே செந்தில் பாலாஜியின் நிழலாக இருக்கும் அசோக்குமார் வீட்டில் வருமான வரித்துறை சோதனையின் போது கணக்கில் காட்டாத பணம் மற்றும் ஆவணங்கள் கிடைக்குமா என்ற ஆவலோடு எதிர்கட்சிகள் காத்துகிடக்கின்றனர்.

இதையும் படியுங்கள்

 சிறுமிகளிடம் இருவிரல் பரிசோதனை நடந்தது உண்மை.! ஆளுநரிடம் திங்கட்கிழமை அறிக்கை- குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம்

click me!