மக்களின் மனநிலையை அறிவதில் தடுமாறுகிறதா திமுக..? இடைத்தேர்தலை எதிர்கொள்வதில் அவநம்பிக்கையா?

By Asianet TamilFirst Published Sep 24, 2019, 10:12 AM IST
Highlights

பிரம்மாண்ட வெற்றி பெற்ற திமுகவோ, இந்த இரு தேர்தல்களில் கிடைத்த முடிவுகளின் அடிப்படையில் மக்களின் மனநிலை எப்படி இருக்குமோ என்று அறிய முடியாத நிலைக்கு ஆளாகியிருக்கிறதோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. 

வேலூர் தேர்தலுக்கு பிறகு மக்களின் மனநிலையை அறிய முடியமல் திமுக தடுமாறுகிறதா என்ற கேள்வி அரசியல் அரங்கில் ஏற்பட்டுள்ளது.
 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி தமிழகத்தில் 38 தொகுதிகளில் மெகா வெற்றி பெற்றது. சிதம்பரம், தருமபுரி தொகுதிகளைத் தவிர எல்லாத் தொகுதிகளிலும் திமுக கூட்டணி வேட்பாளர்கள் லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்கள். திமுக கூட்டணியின் வாக்கு விகிதம் 50 சதவீதத்துக்கும் மேல் இருந்தது. மக்கள் பார்வை திமுக மீது குவிந்திருக்கிறது என்பதை தேர்தல் முடிவுகள் உணர்த்தின.


ஆனால், 4 மாதங்கள் கழித்து வேலூர் தேர்தலில் இந்தக் காட்சி மாறியது. வேலூர் தேர்தலில் திமுக நீண்ட இழுபறிக்கு வெறும் 8,124 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வேலூர் தேர்தலில் திமுக வெற்றி பெற்றபோதும், அந்த வெற்றி  பெருமைப்பட்டுக்கொள்ளும் வகையில்  திமுகவுக்கு அமையவில்லை. இடைத்தேர்தலில் குடியாத்தம் தொகுதியில் வெற்றி பெற்ற திமுக, வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் குடியாத்தம் தொகுதியில் அதிமுகவைவிட சுமார் 20 ஆயிரம் வாக்குகள் குறைவாகப் பெற்றது அக்கட்சியை அதிர்ச்சியில்  தள்ளியது. ஆனால், நாடாளுமன்றத் தேர்தலில் படுதோல்வி அடைந்த அதிமுக, வேலூர் தேர்தலில் தோல்வி  அடைந்தபோதும் அது அக்கட்சிக்கு கவுரமாக அமைந்தது. இந்நிலையில் விக்ரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த இரு தொகுதிகளையும் கைப்பற்றும் முனைப்பில் அதிமுக உள்ளது.


மேலும் தமிழகத்தில் வழக்கமாகப் பொதுத்தேர்தல் பாணி வேறு மாதிரியும் இடைத்தேர்தல் பாணி வேறுமாதிரியும் இருப்பது வழக்கம். இடைத்தேர்தலில் தோற்பதை ஆளுங்கட்சி தங்கள் கவுரவத்துக்கு இழுக்கு ஏற்பட்டதைப் போல கருதுவதால், எப்படி வேண்டுமானாலும் வெற்றி பெற நினைக்கும் போக்கு தமிழகத்தில் உள்ளது. தற்போது அதிமுகவும் அந்த நிலையில்தான் இருக்கிறது. தோல்விகளிலிருந்து மீண்டுவர இந்த இரு தொகுதிகன் வெற்றி உதவும் என்று ஆளுங்கட்சி கருதுகிறது.


ஆனால், பிரம்மாண்ட வெற்றி பெற்ற திமுகவோ, இந்த இரு தேர்தல்களில் கிடைத்த முடிவுகளின் அடிப்படையில் மக்களின் மனநிலை எப்படி இருக்குமோ என்று அறிய முடியாத நிலைக்கு ஆளாகியிருக்கிறதோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகன் ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டி இதை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. “பொதுத் தேர்தலுக்கு இன்னும் 15 மாதங்கள் உள்ளன. ஒவ்வொரு தேர்தலும் எதிர்காலத்தை நிர்ணயிக்கக்கூடிய வித்தியாசமான தேர்தலாகவே உள்ளது. நாடாளுமன்றத் தேர்தலில் நாங்கள் (திமுக) மிகப் பெரிய வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றோம். வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் அது குறைந்தது. மக்களின் மனநிலை ஒரே மாதிரியாக  நீண்ட நாட்களுக்கு நிலைக்கும் என்ற போக்குக்கு மாறாக இது உதாரணமாகியிருக்கிறது. தற்போது மக்களின் மனநிலையைக் கணிப்பது கடினமாகியிருக்கிறது” என்று துரைமுருகன் தெரிவித்திருக்கிறார்.

 
 ஐந்து மாதங்களுக்கு முன்பு பிரம்மாண்டமாக வெற்றி பெற்ற திமுகவால், தற்போது இடைத்தேர்தலை எதிர்கொள்ளும் வேளையில் மக்களின் மனநிலையை அறிந்துகொள்வது கடினமாகியிருக்கிறது என்று கூறியிருப்பது அவநம்பிக்கையில் அக்கட்சி உள்ளதா என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறது. மக்களின் மனநிலையை அறிவதில் திமுக தடுமாறுகிறதா என்ற கேள்வியையும் துரைமுருகனின் பேட்டி வெளிப்படுத்தியிருப்பதாகவே அரசியல் அரங்கில் பார்க்கப்படுகிறது.

click me!