தமிழகத்தில் நடைபெறுவது உதயநிதி - சபரீசன் ஆட்சி.. பொளந்து கட்டும் வி.பி.துரைசாமி..!

By Asianet TamilFirst Published Nov 27, 2021, 9:20 AM IST
Highlights

கடந்த ஆண்டு திமுகவில் மாநிலங்களவை எம்.பி. பதவியை எதிர்பார்த்த வி.பி.துரைசாமி, அது கிடைக்காததால் பாஜகவில் இணைந்தார். எம்.பி. பதவிக்காக உதயநிதியிடம் கெஞ்சினேன் என்றும் துரைசாமி பேசியிருந்தார். இந்நிலையில் தற்போது தமிழகத்தில் மகன், மருமகன் ஆட்சி நடைபெறுவதாகக் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
 

தமிழகத்தில் மகன், மருமகன் ஆட்சிதான் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது என்று தமிழக பாஜக துணைத் தலைவர் வி.பி.துரைசாமி தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் லிட்டர் பெட்ரோல் ரூ.5, டீசல் ரூ. 10 என கலால் வரியை மத்திய அரசு குறைத்தது. இதனைத் தொடர்ந்து பாஜக ஆளும் மாநில அரசுகள் உள்பட வேறு சில மாநில அரசுகளும் பெட்ரோல், டீசல் மீதான விற்பனை வரி, வாட் வரியைக் குறைத்தன. தமிழகத்தில் இதுபோல பெட்ரோல், டீசல் மீதான விற்பனை வரியைக் குறைக்க வேண்டும் என்று பாஜக வலியுறுத்தி வருகிறது. விலை குறைப்பை வலியுறுத்தி தொடர் போராட்டங்களை பாஜக நடத்தி வருகிறது. இந்நிலையில் சென்னையில் தமிழக பாஜக விவசாய அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்தப் போராடத்தில் பாஜக துணைத் தலைவர் வி.பி.துரைசாமி பங்கேற்று பேசுகையில், “தமிழகத்தில் நடைபெற்றுக்கொண்டிருப்பது மகன் (உதயநிதி), மருமகன் (சபரீசன்) ஆட்சிதான். திமுகவில் உண்மையாக உழைத்து கொண்டிருப்போருக்கு எந்த ஒரு அங்கீகாரமும் கொடுக்கப்படுவதில்லை. எந்த விஷயமாக இருந்தாலும் தமிழக அரசு மக்களை ஏமாற்றி, எதற்கெடுத்தாலும் மத்திய அரசை குறை கூறுவதை மட்டுமே திமுக அரசு செய்துக்கொண்டிருக்கிறது. கடந்த ஆண்டு மழையால் பாதிக்கப்பட்ட ஏக்கருக்கு ரூ/30 ஆயிரம் கேட்ட ஸ்டாலின், இந்த ஆண்டு ஆட்சியில் இருக்கும்போது ரூ.20 ஆயிரம் வழங்குவதாக அறிவிக்கிறார்.

மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று பாஜக வலியுறுத்துகிறது. திமுக தேர்தல் வாக்குறுதியாக பெட்ரோல், டீசல் விலை குறைப்பை அறிவித்தது. அதன்படி பெட்ரோல், டீசல் விலை குறைப்பை உடனே அறிவிக்க வேண்டும். திமுகவும் ஊழலும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் என்று பாஜக தேசிய தலைவர் நட்டா சொன்னார். அவரை குறை கூற திமுகவுக்கு எந்தத் தகுதியும் கிடையாது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள பாஜக தயாராகிவிட்டது” என்று விபி துரைசாமி பேசினார்.

 

கடந்த ஆண்டு திமுகவில் மாநிலங்களவை எம்.பி. பதவியை எதிர்பார்த்த வி.பி.துரைசாமி, அது கிடைக்காததால் பாஜகவில் இணைந்தார். எம்.பி. பதவிக்காக உதயநிதியிடம் கெஞ்சினேன் என்றும் துரைசாமி பேசியிருந்தார். இந்நிலையில் தற்போது தமிழகத்தில் மகன், மருமகன் ஆட்சி நடைபெறுவதாகக் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
 

click me!