அதிமுக கட்சியில் இருந்து ஒரு தொண்டன் கூட விலகியது கிடையாது என்று பேசியிருக்கிறார் முன்னாள் அமைச்சர் தங்கமணி.
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள் மற்றும் 150 நகராட்சிகளில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் வரும் 26-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை விருப்ப மனுக்களை தாக்கல் செய்யலாம் என அதிமுக தலைமை கழகம் அறிவித்தது. அதன்படி, பேரூராட்சி மன்ற வார்டு உறுப்பினர் விண்ணப்ப கட்டணம் 1,500 ரூபாய், நகர் மன்ற வார்டு உறுப்பினர் விண்ணப்ப கட்டணம் 2,500 ரூபாய், மாநகராட்சி வார்டு மாமன்ற உறுப்பினர் விண்ணப்ப கட்டணம் 5,000 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
undefined
தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் விருப்ப மனுக்கள் வழங்கும் பணி நேற்று முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நாமக்கல் மாவட்ட அதிமுக சார்பில்,நாமக்கல் மாவட்ட அலுவலகத்தில் நகராட்சி மற்றும் பேரூராட்சி தேர்தலுக்கான விருப்ப மனுக்கள் கொடுக்கப்பட்டன. இதனை முன்னாள் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சரும், நாமக்கல் மாவட்ட செயலாளருமான பி. தங்கமணி தொடங்கி வைத்தார்.அப்போது பேசிய அவர், ‘நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு பணம் கட்டியவர்கள் மீண்டும் கட்ட தேவையில்லை. அதற்கான ரசீது வைத்து இருந்தாலே போதுமானது.
முக்கியமாக, எருமப்பட்டி ஊராட்சி ஒன்றிய தலைவருக்கான தேர்தலை பொறுத்தவரை 15 உறுப்பினர்களில் 9 உறுப்பினர்கள் எங்களுக்கு ஆதரவாக உள்ளனர். ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெற்றால், எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் தேர்தலில் அதிமுக வெற்றி பெறும். நான் யாரையும் கடத்தி வைத்து இருப்பது கிடையாது. இதுகுறித்து ஏற்கனவே தெளிவுபடுத்திவிட்டேன். அதிமுகவில் இருந்து ஒரு சிலர் சொந்த ஆதாயத்திற்காகவும், நிர்பந்தத்தின் காரணமாகவும் மாற்றுக் கட்சிக்கு செல்கின்றனர். ஆனால் அதிமுகவின் உண்மை விசுவாசியான ஒரு தொண்டன் கூட இந்தக் கட்சியில் இருந்து விலகுவது கிடையாது. அதிமுக தொண்டர்கள் அனைவருமே அதிமுகவில் உள்ளனர்’ என்று கூறினார்.