
அடுத்த மாதம் உத்திர பிரதேச மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இங்கு நடப்பது 80 சதவீதத்திற்கும் 20 சதவீதத்துக்கும் இடையேயான போர் என அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பேசியுள்ளார். அவரின் இந்தப் பேச்சு இஸ்லாமியர்களை குறிவைத்து பேசப்பட்டிருக்கிறது என்றும், இது சமூகத்தில் மத பிளவை ஏற்படுத்தும் பேச்சு என்றும் எதிர்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.
உத்தரபிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், உத்ரகாண்ட், கோவா ஆகிய ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்கள் பிப்ரவரி 10ஆம் தேதி தொடங்க உள்ளது. இதில் 7 கட்டமாக உத்திர பிரதேச மாநில தேர்தல் நடைபெற உள்ளது. நாட்டிலேயே அதிக சட்டமன்ற தொகுதிகளை கொண்ட மாநிலமான ஊ.பி உள்ளதால் இந்த தேர்தல் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்நிலையில் மீண்டும் உ.பியில் ஆட்சியைக் கைப்பற்றும் முனைப்பில் பாஜக ஈடுபட்டு வருகிறது. அதற்கான பல்வேறு உத்திகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், பாஜக தலைவர்கள் மற்றும் இந்துத்துவ அமைப்புகளின் தலைவர்கள் இந்துக்களை ஒருமைப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் கடந்த டிசம்பர் மதம் நடந்த இந்து அமைப்புகள் மாநாட்டில் அதில் கலந்து கொண்ட தலைவர்கள் இஸ்லாமியர்களுக்க எதிராக மத வெறுப்பை கக்கினர். 80 சதவீதம் உள்ள இந்துக்கள் 20% உள்ளவர்களை படுகொலை செய்ய வேண்டும் என்றும் அதில் பேசினர்.
ஆபத்தான கட்டத்தில் இந்துமதம் இருப்பதாகவும் எனவே அதை காப்பாற்ற வேண்டும் எனில் அவர்களை கொள்வதை தவிற வேரு வழியில்லை என்றும் வெளிப்படையாகவே இஸ்லாமியர்களுக்கு எதிராக இனப்படுகொலை செய்யவும் அழைப்பு விடுக்கப்பட்டது. அவர்களின் இந்த பேச்சு இனப்படுகொலைக்கான பகிரங்க அழைப்பு என்று ஆங்கில நாளேடுகள் கவலை தெரிவித்தன. அவர்களின் இந்த பேச்சுக்கு நாட்டில் பல்வேறு தரப்பிலிருந்து கண்டனங்கள் எழுந்தன. ஆனாலும் இது வரையில் அப்படிப் பேசியவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பு பேச்சுக்கள் அதிகரித்துவிட்டது என்ற விமர்சனம் பாஜக மீது இருந்து வருகிறது. இந்நிலையில் உத்தரபிரதேச மாநில தலைநகர் லக்னோவில் தனியார் செய்தி சேனல் ஒன்று ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தற்போது நடப்பது 80 சதவீதத்துக்கும் 20 சதவீதத்துக்கும் இடையான போர் என சட்டமன்ற தேர்தலை குறிப்பிட்டு கூறினார். அவரின் இந்த பேச்சு ஹரித்துவார் பேச்சை ஒத்திருக்கிறது என்றும் பலரும் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர். அடுத்த மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அவர் மேற்கோள் காட்டிய எண்கள் இந்துக்களையும் முஸ்லிம்களையும் குறிப்பிடுவனவாக உள்ளது என்றும், இது நாட்டில் பிளவை ஏற்படுத்தும் பேச்சு என்றும் பலரும் விமர்சித்து வருகின்றனர்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர் 80 சதவீதம் பேர் தேசியவாதம், நல்லாட்சி, வளர்ச்சியை ஆதரிப்பவர்கள் அப்படிப்பட்டவர்கள் பாஜகவுக்கு ஆதரவாக உள்ளனர். ஆனால் இதை எதிர்ப்பவர்கள் மாபியாக்கள், கிரிமினல்கள், விவசாய விரோதிகள், இது போன்றவர்களே 20 சதவீதத்துக்கு ஆதரவாக இருக்கின்றனர் எனக் கூறியுள்ளார். மேலும் 80 vs 20 சண்டையில் தாமரை தான் வழிகாட்டும் என பாஜகவின் தேர்தல் சின்னத்தை குறிப்பிட்டு அவர் பேசினார். கடந்த சில மாதங்களாக அவரின் பேச்சுக்கள் தொடர்ந்து இஸ்லாமியர்களுக்கு எதிராக இருந்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன, இதேபோல் பிரதமர் மோடியின் தலைமையிலான சமாதான ஆட்சிக்கு இனி இடமில்லை, 2017 ஆம் ஆண்டுக்கு முன் அனைவருக்கும் ரேஷன் கிடைத்ததா.? அப்போது தங்களை ஜான் என்று சொன்னவர்கள்தான் இன்று ரேஷன் அரிசியை சாப்பிடுகிறார்கள் என உபியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் யோகி ஆதித்யநாத் சமீபத்தில் பேசியிருந்தார். இந்நிலையில் அவர் நடப்பது 80க்கும் 20க்கும் மான போர் என கூறியிருப்பது சர்ச்சையே ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் உ.பியில் நடந்துவரும் மத துவேஷத்தை தேர்தல் ஆணையம் தடுத்து நிறுத்த வேண்டும் என மாயாவதி உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.