உண்மையில் திருமாவளவன் என்னதான் பேசினார்..!! நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் வெளியிட்ட பரபரப்பு தகவல்..!!

Published : Nov 02, 2020, 12:41 PM IST
உண்மையில் திருமாவளவன்  என்னதான் பேசினார்..!!  நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் வெளியிட்ட பரபரப்பு தகவல்..!!

சுருக்கம்

திருமாவளவன் அவர்களோ எந்தச் சூழலிலும் எந்த இன, சாதி, மதப் பெண்கள் சார்ந்தும் தவறாக பேசக்கூடியவர்களோ, கருத்துரை வழங்கக் கூடியவர்களோ இல்லை. முனைவர் தொல். திருமாவளவன் அவர்களின் மேற்குறிப்பிட்டுள்ளப் பேச்சினை அனைத்து சமூகப் பெண்களும் ஒருமுறையேனும் கேட்டால், பெண்ணுரிமை சார்ந்த தந்தை  பெரியாரின் போராட்டத்தினை எளிதில் விளங்கிக் கொள்வர் என்பது உறுதி. 

ஐரோப்பிய பெரியாரிய அம்பேத்கரிய தோழர்களின் கூட்டமைப்பு, இங்கிலாந்து, சுவீடன், ஃபின்லாந்து, ஜெர்மனி, ஃபிரான்ஸ், சுவிசர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் உள்ள பெரியார் அம்பேத்கார் படிப்பு வட்டங்களின் ஒன்றிணைந்த அமைப்பாகும். இவ்வமைப்பில் தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்து, கல்விக் கற்று ஐரோப்பிய நாடுகளில் பணிபுரியும் இந்தியக் குடியுரிமை வைத்துள்ளவர்கள் மட்டுமே இயங்கி வருகிறார்கள்.
 
ஐரோப்பிய நாடுகளில் பெரியாரிய, அண்ணல் அம்பேத்கரிய உணர்வாளர்களின் மத்தியில் தமிழக, இந்திய அரசியல் விவாதங்கள், நிகழ்கால சமூக மாற்றங்கள் குறித்த கருத்துப் பரிமாற்றங்கள் நடத்துவதும் அந்நிகழ்வுகளில் சிறப்பு அழைப்பாளராக தமிழக அரசியல், சமூக இயக்க தலைவர்கள், கொள்கையாளர்களை இணையவழி கலந்துரையாடலில் பங்குபெறச் செய்வதும் என இதுவரை 30 நிகழ்ச்சிகள் நடத்தி வந்துள்ளோம்.
 
”Periyar and Indian Politics” என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் தந்தை பெரியாரின் பிறந்த நாள் சிறப்பு மாநாடாக இணையவழியில் செப் 26-27 இரு நாட்கள் நடத்தினோம். இதில் ஐரோப்பிய நாடுகள் மற்றும் இந்திய அளவிலான கல்வியாளர்கள்/பேராசிரியர்கள் கலந்துக்கொண்டு முதல் நாளில் கருத்துரை வழங்கினர். 

இதன் அனைத்து காணொலிகளும் The Modern Rationalist (https://www.youtube.com/channel/UCEEHrFQ5emU2d8fO7OIjYqA) என்ற youtube வலைகாட்சியில் காணலாம். முதல் நாளின் மாநாட்டினை  திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் கி. வீரமணி ஐயா அவர்கள் திறந்துவைத்து சிறப்புரை நிகழ்த்தினார்.
 
முதல் நாள் நிகழ்வில், பெரியாரும் பெண்ணியமும் என்னும் தலைப்பில் திருமிகு மொஹூவா மோய்த்ரா M.P (திரிணாமூல் காங்கிரஸ், மேற்கு வங்கம்) அவர்களும் பேசினார். இரண்டாம் நாள் நிகழ்வினை திருமிகு கனிமொழி M.P (மகளிரணிச் செயலாளர் திராவிட முன்னேற்றக் கழகம்) மற்றும் முனைவர் தொல். திருமாவளவன் M.P (தலைவர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி) அவர்களும் திறந்துவைத்து சிறப்புரை நிகழ்த்தினர்.
இம்மாநாட்டில் பேசிய முனைவர் தொல். திருமாவளவன் அவர்களின் 40 நிமிட பேச்சில் 30-40 விநாடிகள் மட்டும் திட்டமிட்டு சர்ச்சையாக்கும் நோக்கில் பரப்பி, தமிழக அரசியல் அரங்கு மற்றும் இந்திய ஊடகங்களில் தேவையற்ற விவாதத்தினை சிலர்  ஏற்படுத்தியுள்ளனர். முனைவர் தொல். திருமாவளவன் அவர்களின் முழுமையான பேச்சு (https://www.youtube.com/watch?v=yJRCTHtSsQU&ab_channel=PeriyarTV) இணைக்கப்பட்டுள்ளது. 

இதனை முழுமையாக கேட்டால், முனைவர் தொல். திருமாவளவன் அவர்கள் எடுத்துரைத்த கருத்து எல்லோருக்கும் புரியும் என்பதோடு அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படும். பெண்ணுரிமை, சமத்துவம் என்ற திராவிட இயக்கத் தலைவர்களின் கோட்பாட்டில், எல்லா மனிதர்களும் சுயமரியாதையோடு வாழ தன் வாழ்நாளெல்லாம் போராடிய தந்தை பெரியாரின் வழியில் வந்த எங்கள் கூட்டமைப்போ தந்தை பெரியாரின் மாணவராக தன்னை பிரகடனப்படுத்தும் முனைவர் தொல். திருமாவளவன் அவர்களோ எந்தச் சூழலிலும் எந்த இன, சாதி, மதப் பெண்கள் சார்ந்தும் தவறாக பேசக்கூடியவர்களோ, கருத்துரை வழங்கக் கூடியவர்களோ இல்லை.

முனைவர் தொல். திருமாவளவன் அவர்களின் மேற்குறிப்பிட்டுள்ளப் பேச்சினை அனைத்து சமூகப் பெண்களும் ஒருமுறையேனும் கேட்டால், பெண்ணுரிமை சார்ந்த தந்தை  பெரியாரின் போராட்டத்தினை எளிதில் விளங்கிக் கொள்வர் என்பது உறுதி. அதோடு முனைவர் தொல். திருமாவளவன் அவர்களின் பேச்சின் கருதுகோளை விளங்கிக்கொண்டு, உண்மையின் பக்கம் நிற்பர் என்பதும் உறுதி.

மேலும், ஐரோப்பிய பெரியாரிய அம்பேத்கரிய தோழர்களின் கூட்டமைப்பு மதமாற்றம் செய்வதற்காக நிகழ்ச்சிகள் நடத்துவதாகவும் ஊடகங்கள் வழியே சிலர் விவாதிக்கின்றனர். இதற்கு வன்மையான கண்டனங்களை எங்கள் கூட்டமைப்பு சார்பாக பதிவு செய்ய விரும்புகிறோம். சாதி, மதங்களை கடந்து, தமிழ்நாட்டின் அங்கமாகவும் இந்திய குடியுரிமையோடும் வாழும் திராவிட இயக்கக் கோட்பாட்டாளர்களான நாங்கள் மதவெறி, சாதிவெறி அரசியலுக்கு எதிரான கருத்துப் பரப்புரை செய்பவர்கள், அதற்கான அரசியலை முன்னெடுக்கும் சக தோழமை அமைப்புகளோடு இணைந்து பணியாற்றுபவர்கள் என்பதனை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறோம். இவ்வேளையில், அண்ணன் முனைவர் தொல்.திருமாவளவன் அவர்களோடு துணை நிற்பதோடு, அவர் மீதான அவதூறு பரப்புவோர்களுக்கு எங்கள் கண்டனங்களையும் தெரிவித்துக்கொள்கிறோம். என  ஐரோப்பிய பெரியாரிய அம்பேத்கரிய தோழர்களின் கூட்டமைப்பு விளக்கம் அளித்துள்ளது. 
 

PREV
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!