
ஆம்புலன்ஸ் சேவையில் 108 என்ற எண்ணை பொறித்ததை தவிர திமுக வேறு என்ன செய்தது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் சட்டப்பேரவையில் நடைபெற்று வருகிறது. சுகாதாரத்துறை மானியக் கோரிக்கை விவாதத்தில் பேசிய திமுகவின் பூங்கோதை தமிழகத்தில் தொற்றாத நோய் அதிகரித்துள்ளதற்கு மதுவே காரணம் எனவும், 108 ஆம்புலன்சில் வசதி இல்லாததால் உயிர் இழப்பு ஏற்படுவதாகவும் குற்றம் சாட்டினார்.
மேலும் மது,பான்பராக்,குட்கா உள்ளிட்டவை தமிழகத்தில் தடையின்றி கிடைப்பதாக குற்றம் சாட்டிய அவர், முத்துலட்சுமி ரெட்டி உதவி திட்டத்துக்கு ஒதுக்கிய பணத்தை அரசு செலவிடவில்லை என்றும் கூறினார்.
இதற்கு பதிலளித்து பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் 108 அறிவிப்புகளை வெளியிட்டார்.
அப்போது, ஆம்புலன்ஸ் சேவையில் 108 என்ற எண்ணை பொறித்ததை தவிர திமுக வேறு என்ன செய்தது என கேள்வி எழுப்பினார்.
வேலூர், சேலம், கோவை, மதுரை அரசு மருத்துவமனைகளில் தீக்காய சிகிச்சை மையங்கள் தொடங்கப்படும் எனவும், புதிதாக தொடங்கப்பட்ட புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு ரூ.26.76 கோடியில் புதிய உபகரணங்கள் வாங்கப்படும் எனவும் தெரிவித்தார்.
அனைத்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் ரூ.40.85 கோடியில் மருத்துவ தகவல் மேலாண்மை திட்டம் தொடங்கப்படும் எனவும், நெல்லை, மதுரை அரசு மருத்துவக் கல்லூரிகளில் தலா 100 கூடுதல் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.
11 மாவட்ட மருத்துவமனைகளில் ரூ.8 கோடியே 15 லட்சம் செலவில் டிஎன்பி மருத்துவ மேற்படிப்பு தொடங்கப்படும் எனவும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.