
இளையராஜா செய்த குற்றம் என்ன? என்று மத்திய இணை அமைச்சர் எல். முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.
மோடிக்கு இளையராஜா புகழாரம்
ப்ளூ கிராஃப் டிஜிட்டல் ஃபவுண்டேஷன் என்ற நிறுவனம் ‘மோடியும் அம்பேத்கரும்' என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்தப் புத்தகத்தில் இசையமைப்பாளர் இளையராஜா அணிந்துரை ஒன்றை எழுதியுள்ளார். அதில், “பிரதமர் மோடி தலைமையில் நாடு வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் கண்டு வருகிறது. இந்தியாவின் உள்கட்டமைப்புகள் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. சமூக நீதி விஷயத்தில் பிரதமர் மோடி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். மோடியின் முத்தலாக் தடை போன்ற பல்வேறு சமூகப் பாதுகாப்பு திட்டங்களைக் கண்டு அம்பேத்கர் பெருமிதம் கொள்வார். அம்பேத்கரும் மோடியும் இந்தியா குறித்து பெரிய கனவு கண்டவர்கள்" என்று பிரதமர் மோடியைப் புகழ்ந்து எழுதியுள்ளார்.
மத்திய அமைச்சர் கண்டனம்
இளையராஜாவின் இந்தக் கருத்துக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் எதிர்ப்புகள் கிளம்பின. மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டு கருத்து தெரிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். ஒரு சாரார் இளையராஜாவை விமர்சித்தும், அவருக்கு கண்டனம் தெரிவித்தும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். இளையராஜாவை பலரும் விமர்சனம் செய்து வரும் நிலையில், தற்போது பாஜகவினர் பதிலடி தரத் தொடங்கியுள்ளனர். அந்த வகையில் மத்திய இணை அமைச்சர் எல். முருகன், இளையராஜாவுக்கு எதிராக விமர்சனம் செய்வோரைக் கண்டித்துள்ளார். இதுதொடர்பாக எல். முருகன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
அறிவாலயத்துக்கு பிடிக்காத கருத்து?
அதில், “இளையராஜா செய்த குற்றம் என்ன? அறிவாலயம் மற்றும் அதன் சுற்றத்துக்குப் பிடிக்காத கருத்து குற்றமா? இந்திய அரசியலமைப்புச் சட்டம் கருத்துச் சுதந்திரத்தை அனுமதித்திருக்கிறது. அதையே இளையராஜாவுக்கு மறுத்ததன் மூலம் திமுக தனது தலித் விரோத மற்றும் அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரான தன்மையைக் காட்டியிருக்கிறது” என்று எல். முருகன் பதிவிட்டுள்ளார்.