கொரோனாவை கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும்? திமுக அரசுக்கு தருமபுரி திமுக எம்பி அறிவுரை..!

By Selva KathirFirst Published May 14, 2021, 12:58 PM IST
Highlights

தருமபுரி மாவட்டத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த உடனடியாக என்ன செய்ய வேண்டும் என்று தமிழகத்தை ஆளும் திமுக அரசுக்கு தருமபுரி எம்பி செந்தில் சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

தருமபுரி மாவட்டத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த உடனடியாக என்ன செய்ய வேண்டும் என்று தமிழகத்தை ஆளும் திமுக அரசுக்கு தருமபுரி எம்பி செந்தில் சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

தருமபுரி எம்பியான செந்தில்குமார் ட்விட்டரில் அதிகம் செயல்பாட்டில் இருப்பவர். குறிப்பிட்டு கூற வேண்டும் என்றால் ட்விட்டரில் மட்டுமே அவருடைய செயல்பாடுகளை பார்க்க முடியும். நாடாளுமன்ற தேர்தலில் வென்று இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக எம்பியாக இருக்கும் செந்தில் இதுவரை தனது தொகுதிக்கு என்ன என்ன செய்துள்ளார் என்கிற விவரங்களை இதுவரை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது இல்லை. இதே போல அவர் தொகுதிப்பக்கம் சென்று மக்களின் குறைகளை கேட்டதாகவும் தகவல் இல்லை. ஆனால் பாமகவினரை வம்பிழுக்க வேண்டும் என்றால் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களை சந்திக்கச் செல்வதாக கூறி அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தும் வழக்கம் அவருக்கு உண்டு.

இதனிடையே நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் தருமபுரி மாவட்டத்தில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் படு தோல்வி அடைந்துள்ளது. ஒரு தொகுதியில் கூட திமுக மற்றும் கூட்டணி கட்சியால் வெற்றி பெற முடியவில்லை. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அமோக வெற்றியை கொடுத்த தருமபுரி இந்த முறை திமுகவிற்கு காலை வாரி படுகுழியில் தள்ள செந்தில் போன்ற எம்பிக்கள் தான் காரணம் என்று கூறப்படுகிறது. ஏனென்றால் தருமபுரி எம்பியாக இருந்து கொண்டு தருமபுரிக்கு என்ன தேவையோ அதை பற்றி பேசாமல் அன்புமணியை வம்பிற்கு இழப்பது, ரஜினி அரசியல் வருகை தொடர்பாக கருத்து கூறுவது, மோடி எப்படி செயல்பட வேண்டும் என்று என அறிவுரை கூறுவது என தேவையற்ற விஷயங்களில் ஈடுபட்டது தான்.

இதுநாள் வரை மோடி அரசுக்கு அறிவுரை கூறி வந்த செந்தில் தற்போது அவரது சொந்த கட்சியான திமுக அரசுக்கே அறிவுரை கூறும் அளவிற்கு இறங்கி வந்துள்ளார். அதாவது தருமபுரியில் தற்போது கொரோனா பாதிப்பு மிகவும் அதிகமாகிவிட்டதாம், உடனே மாவட்டத்திற்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்க வேண்டும் என்று அவர் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார். மேலும் கொரோனாவால் ஏற்படும் மரணங்கள் அதிகரித்துள்ளதாகவும் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு சென்று கொண்டிருப்பதாகவும் உண்மையை கூறியுள்ளார் செந்தில். தருமபுரியில் மொத்தம் உள்ள 1000 சிகிச்சை படுக்கைகளும் 450 ஆக்சிஜன் படுக்கைகளும் நிரம்பிவிட்டதாகவும் செந்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் தருமபுரி மருத்துவமனையில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் ட்விட்டரில் கூறியுள்ளார் செந்தில். உண்மையில் உண்மையை இப்படி உறக்க கூறிய செந்திலை பாராட்டலாம். ஆனால் இப்படி வெட்டியாக ட்விட்டரில் எழுதிதிக் கொண்டிருப்பதற்கு பதில் பிபிஇ உடை அணிந்து கொண்டு மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று அங்கு உள்ள நிலவரத்தை அறிந்து அது குறித்து மு.க.ஸ்டாலினுக்கு செந்தில் அறிக்கை கொடுக்கலாம். அல்லது சுகாதாரத்துறை அமைச்சர மா.சுப்ரமணியத்தை சந்தித்து இது குறித்து விவாதிக்கலாம்.

நிலைமையின் வீரியத்தை உணர்ந்து அவர்களும் நடவடிக்கை எடுக்க வாய்ப்பு உள்ளது- ஆனால் வழக்கம் போல் அன்புமணி, ரஜினி, மோடியை வம்பிழுக்க பயன்படுத்தப்படும் ட்விட்டரில் நீங்கள் விடுத்த கோரிக்கைகளை எப்படி முதலமைச்சர் சீரியசாக எடுத்துக் கொள்வார். இந்த விஷயம் எப்படி சுகாதாரத்துறை அமைச்சருக்கு தெரியும்? சரி எது எப்படியோ திமுக எம்பியாக இருந்து கொண்டு திமுக அரசு எப்படி செயல்பட வேண்டும் என்று அறிவுரைகூறி உள்ள திமுக எம்பியின் அறிவுரைகளை திமுக அரசு ஏற்குமா என்று பொருத்திருந்து பார்ப்போம்.

click me!