மதிமுகவின் 23 தீர்மானங்கள் என்ன தெரியுமா? 

Asianet News Tamil  
Published : Sep 15, 2017, 06:59 PM ISTUpdated : Sep 19, 2018, 01:11 AM IST
மதிமுகவின் 23 தீர்மானங்கள் என்ன தெரியுமா? 

சுருக்கம்

What are the 23 Decisions of the mdmk

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் பேரறிஞர் அண்ணா 109 வது பிறந்த நாள் மாநாடு தஞ்சாவூரில் நடைபெற்றது. அப்போது 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

தீர்மானம் : 1

திராவிடப் பேரியக்கத்தின் அடிப்படை இலட்சியங்களான சமூக நீதி, மொழி, இன, பண்பாட்டு உரிமைகள் பாதுகாப்பு, மதச்சார்பற்ற தன்மை, மாநில சுயாட்சி போன்றவற்றை முன்னெடுத்துச் சென்றிடவும், தமிழ்நாட்டில் கால் ஊன்ற நினைக்கும் இந்துத்துவக் கூட்டத்தின் முயற்சிகளை முறியடிக்க, அண்ணா பிறந்தநாள் விழா மாநாட்டின் மூலம் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் உறுதி ஏற்கின்றது.

தீர்மானம் : 2


‘நீட்’ நுழைவுத் தேர்வு நடத்துவதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2017 பிப்ரவரி மாதம் நிறைவேற்றப்பட்ட சட்ட முன் வடிவுக்கு ஒப்புதல் அளிக்காமல் மத்திய அரசு கிடப்பில் போட்டது வன்மையான கண்டனத்துக்கு உரியது.

மருத்துவப் படிப்பிற்கு ‘நீட்’ தேர்வு கட்டாயம் எனும் நிலையில் இருந்து தமிழ்நாட்டுக்கு முழு விலக்கு அளிக்க வேண்டும். 

இல்லையேல், வரலாறு காணாத போராட்டத்தைச் சந்திக்க வேண்டிய நிலைமை உருவாகும் என இந்த மாநாடு எச்சரிக்கை செய்கின்றது.

தீர்மானம் : 3

மாநிலங்களின் உரிமைகளைப் பறித்து கல்வித் துறையைக் காவிமயமாக்கித் தனியாருக்குத் தாரை வார்த்து ஏகபோக ஆதிக்கம் செலுத்த முயற்சிக்கும் மத்திய அரசிடம் இருந்து கல்வித் துறையை முழுமையாக மாநில அதிகாரப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும். 

தீர்மானம் : 4

தமிழ்நாட்டின் உயிர் ஆதாரமான காவிரி மரபு உரிமையை நிலைநாட்ட மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்காற்றுக் குழு அமைத்திட உடனடியாக அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று தஞ்சைத் தரணியில் நடைபெறும். 

தீர்மானம் : 5

தமிழக அரசு காவிரிப் பிரச்சினையில் மிகவும் கவனமாக நமது தரப்பு வாதத்தை முன்வைக்க வேண்டும் என்றும், கர்நாடகம் காவிரியின் குறுக்கே எக்காரணம் கொண்டும் அணைகள் கட்ட மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது.

தீர்மானம் : 6

காவிரிப் படுகை மாவட்டங்களைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும்.

தீர்மானம் : 7

காவிரிப் பிரச்சினைக்கு நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பைச் செயற்படுத்துவது ஒன்றுதான் மத்திய அரசின் பொறுப்பும் கடமையும் என்பதை உணர வேண்டும்.  

நிரந்தரத் தீர்ப்பு ஆயம் அமைத்திட நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள சட்ட முன்வடிவைத் திரும்பப் பெற வேண்டும்.

தீர்மானம் : 8

தமிழக அரசு, விவசாயிகளின் நெருக்கடிகளை உணர்ந்து, வங்கிக் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும். அதற்குத் தேவையான நிதி ஆதாரத்தை மத்திய அரசிடம் இருந்து வாதாடிப் பெற வேண்டும் 

தீர்மானம் : 9

முத்தரப்புப் பேச்சுவார்த்தை நடத்தி, நடப்பு ஆண்டுக்கு, கரும்பு  டன் ஒன்றுக்கு ரூ, 4,000/- என்று கொள்முதல் விலையைத் தீர்மானிக்க வேண்டும் 

தீர்மானம் : 10

தமிழக அரசு தமிழ்நாட்டின் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், நிலத்தடி நீர் மட்டம் ஆயிரம் அடிக்குக் கீழே போய்க் கொண்டு இருப்பதைக் கருத்தில் கொண்டும் உடனடியாக சீமைக் கருவேல மரங்களைப் பூண்டோடு அழிக்க சட்டம் ஒன்றை இயற்ற வேண்டும்.

தீர்மானம் : 11

அ.தி.மு.க. அரசு உடனடியாக மதுக்கடைகளை நிரந்தரமாக மூடி, முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் 

தீர்மானம் : 12

சென்னை உயர் நீதிமன்றம் உத்திரவிட்டவாறு உள்ளாட்சித் தேர்தலை நவம்பர் 17-ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 

தீர்மானம் : 13


செம்மொழித் தமிழ் ஆய்வு மையத்தை திருவாரூர் மத்தியப் பல்கலைக் கழகத்துடன் இணைக்கும் திட்டத்தை அனுமதிக்கக் கூடாது.

தீர்மானம் : 14

நடைமுறையில் நிதி ஆயோக்கின் செயல்பாடுகள் மாநிலங்களுக்கு எதிராக இருப்பதால் ‘நிதி ஆயோக்’ அமைப்பை மத்திய அரசு கலைக்க வேண்டும்; மாநிலங்களின் அதிகhர வரம்பில் தலையிடாமல், நிதி ஒதுக்கீடு மற்றும் திட்டங்கள் குறித்து மாநிலங்களுடன் கருத்து ஒற்றுமையுடன் செயல்படத் தகுந்த ஓர் அமைப்பை உருவாக்க வேண்டும் 

தீர்மானம் : 15

தேசிய சுகhதாரக் கொள்கை 2017-யைத் திரும்பப் பெற வேண்டும்; பொது சுகாதாரத் துறை அரசுக் கட்டுப்பாட்டிலேயே தொடர அனுமதிக்க வேண்டும் 

தீர்மானம் : 16

கீழடி தொல்லியல் அகழ்வு ஆராய்ச்சி தொய்வின்றித் தொடர வேண்டும் 

தீர்மானம் : 17


தமிழக அரசு உடனடியாக திருமுருகன் காந்தி உள்ளிட்டவர்கள் மீதான குண்டர் சட்டத்தை இரத்து செய்து விடுதலை செய்ய வேண்டும்; நீட் நுழைவுத் தேர்வைக் கண்டித்து அறவழியில் போராடிய மாணவர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெற்று, சிறையில் அடைக்கப்பட்டு உள்ளோரை விடுதலை செய்ய வேண்டும்.

தீர்மானம் : 18

இலங்கைச் சிறையில் உள்ள அனைத்து மீனவர்களையும் விடுதலை செய்வதுடன், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளைத் திரும்பப் பெறுவதுடன் அதற்குரிய நட்ட ஈட்டுத் தொகையையும் இலங்கை அரசிடமிருந்து பெற்றுத் தர வேண்டும். 

தீர்மானம் : 19


ஐரோப்பிய ஒன்றியத்தைப் பின்பற்றி உலகின் மற்ற நாடுகளும், இந்தியாவும் விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும். இலங்கையில் தமிழர்களுக்கென்று தாயகம் மலர பொது வாக்கெடுப்பு நடத்துவது ஒன்றே தீர்வு.

தீர்மானம் : 20


இந்திய அரசு ரோஹிங்கிய முஸ்லிம்களை மியான்மருக்குத் திருப்பி அனுப்பும் முடிவைக் கைவிட்டு, மனித நேயத்துடன் அம்மக்களுக்கு அகதிகளுக்கான உதவிகளை அளிக்க வேண்டும்.

தீர்மானம் : 21

அணு உலைகளை மூடக் கோரும் மக்களின் உணர்வுகளை அலட்சியம் செய்து விட்டு மேலும் மேலும் கூடன்குளத்தில் மூன்று, நான்கு மற்றும் ஐந்து, ஆறு என தொடர்ச்சியாக அணு உலைகளை அமைக்க ரஷ்ய நாட்டுடன் மோடி அரசு ஒப்பந்தம் போடுவதை வன்மையாகக் கண்டிப்பதுடன், கூடன்குளம் அணு உலைகளை மூட வேண்டும்.

தீர்மானம் 22 

தஞ்சாவூரில் இருந்து பட்டுக்கோட்டைக்குப் புதிய ரயில் தடம் அமைக்கின்ற பணிகள் நீண்ட நெடுங்காலமாகக் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்கு உரிய நிதி ஒதுக்கீடு செய்து, விரைந்து பணிகளை முடித்து, போக்குவரத்துக்கு ஆவன செய்ய வேண்டும்.

தீர்மானம் 23

தமிழ் உயர் ஆய்விற்காகத் தமிழ்ப் பல்கலைக்கழகம், உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், தமிழ் வளர்ச்சித்துறை, உலகத் தமிழ்ச் சங்கம், செம்மொழித்  தமிழ் ஆய்வு மத்திய நிறுவனம் எனப் பல நிறுவனங்களை நிறுவியும், தமிழில் முனைவர் பட்டம் பெற்று, இதர தேர்வுகளில் தேர்ச்சி பெற்றும் தகுதி வாய்ந்தவர்களுக்குப் பணி வாய்ப்பு அளிக்கப்படவில்லை. எனவே, இந்நிறுவனங்களில் இவர்களுக்குப் பணி வாய்ப்பு அளித்திட வேண்டும். 


 

PREV
click me!

Recommended Stories

ஓ.பி.எஸ்- டிடிவி.தினகரனுக்கு அமித் ஷா போடும் முட்டுக்கட்டை..! தவெகவுக்கு செக் வைக்கும் அமமுக..!
திமுக மீது தவெகவின் திடீர் கரிசனம்.. டெல்லியில் நடந்த மனமாற்றம்..! அடியோடு மாறிய நிர்வாகிகள்..!