
நீட் தேர்வால் சமூக நீதிக்கு ஆபத்தில்லை என்றும், அரசு பள்ளிகளில் ஒழுங்காக பாடம் நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச். ராஜா கூறியுள்ளார்.
நீட் தேர்வுக்கு எதிர்ப்பாக தமிழகம் முழுவதும் பல்வேறு தரப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். அரியலூர் மாணவி அனிதாவின் தற்கொலைக்கு நீதி கேட்டும் அவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் சார்பில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டு வருகின்றன.
திமுகவிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தமிழக பாஜகவைச் சேர்ந்தவர்கள் இன்று தமிழகம் முழுவதும் நீட் தேர்வுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
சென்னை அருகே தாம்பரத்தில் நீட் தேர்வுக்கு ஆதரவாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்து கொண்டார்.
சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் நீட் தேர்வுக்கு ஆதரவாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச். ராஜா கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், நீட் தேர்வில் இருந்து தமிழக அரசு ஓராண்டு மட்டுமே விலக்கு கேட்டது.
நீட் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற்றாலும் 69 சதவீத இடவொதுக்கீடு பாதிக்கப்படாது. 69 சதவீதம் இடவொதுக்கீட்டுக்கு பாதிப்பு வராத பட்சத்தில் சாமானிய மாணவர்கள் எவ்வாறு பாதிக்கப்படுவார்கள்.
நீட் தேர்வின் அவசியத்தை வலியுறுத்துகிறது அனிதாவின் மரணம். பகுத்தறிவு குறித்து பேசுபவர்கள் அடிப்படை அறிவில்லாமல் பேசுகின்றனர்.
அரசு பள்ளிகளில் ஒழுங்காக பாடம் நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும். தனியார் பள்ளி மாணவர்கள் நீட் தேர்வில் அதிக இடங்களைப் பெற்றுள்ளனர் என்றும் ஹெச் ராஜா கூறியுள்ளார்.