
அரசியல்வாதிகள் பலர் அரசியலில் நடித்துக் கொண்டிருக்க, விஷாலோ சினிமா துறையில் அரசியல் செய்து கொண்டிருக்கிறார் என்கிறது தென்னிந்திய சினிமா உலகம்.
திருட்டு வி.சி.டி. விவகாரம், நடிகர் சங்க கட்டிடம், சினிமாவை புரட்டும் ஜி.எஸ்.டி. ஆகிய விவாகரங்களில் விஷாலின் போக்கும், பேச்சும் அரசியல்வாதி போல் உள்ளது என்று ஆளாளுக்கு விமர்சனம் வைக்கின்றனர்.
சமீப காலமாக தனது படங்கள் எதுவுமே சரியாக போகாத நிலையிலேயே இப்படி கெத்து காட்டிய விஷாலுக்கு, அவருடைய நேற்றைய ரிலீஸான ‘துப்பறிவாளன்’ நல்ல ரிவியூவை கொடுத்து வருகிறது. ஹிட், மெகா ஹிட் என்று வட்டத்துக்குள் வருமோ இல்லையோ அனால் வெகு நாட்களுக்குப் பின் விஷால் ஒரு நல்ல படத்தை கொடுத்திருக்கிறார் என்கிற பேச்சை உருவாக்கியிருக்கிறது.
இந்நிலையில் விஷாலிடம் ‘ரஜினி, கமல் இருவரும் அரசியலுக்கு வருவது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?’ என்று கேட்டதற்கு “இரண்டு பேருமே இப்போதுதான் பொது விஷயங்களை பேச துவங்கியிருக்காங்க. அரசியலுக்கு வருவதா ரெண்டு பேருமே உறுதியாக சொல்லவில்லை. ஆனால் என்னை பொறுத்தவரை கமல் சாரை விரும்புகிறேன். அரது தைரியம், முடிவு எடுக்கும் தன்மை, சமுதாயத்தில் நடக்கும் தவறை சுட்டிக்காட்டும் விஷயம் ஆகியவை ஆஸம்! இவையெல்லாமே அவரிடம் என்னை அதிகம் கவர்ந்த விஷயங்கள்.” என்றார்.
தமிழ் மற்றும் தென்னிந்திய திரையுலக சங்கங்கள் சமீபத்தில் சந்தித்த தேர்தலில் விஷாலுக்கு பல விஷயங்களில் வழிகாட்டியாக இருந்தது கமல்தான் என்பதை இப்போது நினைவில் கொள்க.
உங்களுக்கு அரசியல் ஆர்வம் இருக்கிறதா? என்று கேட்டபோது “நேரடியா பதில் சொல்றேன். அதிகாரத்தில் இருந்தால்தான் அதிக நன்மை செய்ய முடியும். கண்டிப்பாக அரசியலுக்கு வருவேன். நல்லது செய்வதுதான் அரசியல் அப்படின்னா நிச்சயம் அரசியலுக்கு வருவேன்.” என்றிருக்கிறார்.
ஆளுங்கட்சி லீடர்ஸ் ப்ளீஸ் வாட்ச்! அடுத்த சண்டைக்கோழி ரெடி!