
அதிமுகவில் பிளவு என்பதே இல்லை எனவும் கட்சியில் இருக்கும் கருத்து வேறுபாடுகளை மீடியாக்கள் பெரிது படுத்தி காட்டக்கூடாது எனவும் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா இருந்த போதும் சரி அவர் மறைந்த பின்பும் சரி மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை ஒரே நிலைபாட்டில் இருந்து வருகிறார்.
அப்போதிலிருந்தே யாரையும் விட்டுக்கொடுக்காமல் ஒரே விஷயத்தை சொல்லிவருகிறார். அதிமுக தொடர்ந்து நிலைத்து நிற்கும் எனவும் கருத்து வேறுபாடு மட்டும் அதிமுகவினருக்குள் நிலவி வருகிறது என்றும் கூறி வருகிறார்.
ஆனால் அதிமுக இரு அணியாகவும் மூன்று அணியாகவும் மீண்டும் இரண்டு அணியாகவும் பிரிந்து கிடக்கிறது என்பது ஊரறிந்த உண்மை.
சசிகலா சிறைக்கு செல்லும் முன் அவரையே பொதுச்செயலாளராக பொறுப்பேற்க சொல்வதில் முதல் ஆளாக நின்றவர் தம்பிதுரை. அவர் சிறைக்கு சென்றதும் டிடிவிக்கு ஆதரவு அளித்தும் பேசி வந்தார்.
பின்னர் டிடிவி தினகரன் பிரிந்து ஆட்சியை கவிழ்ப்பேன் என முழக்கமிடும் போது அதிமுக ஆட்சியை அசைக்க முடியாது என எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் தம்பிதுரை பேசினார்.
இதைதொடர்ந்து தம்பிதுரை கட்சி பொறுப்பில் இருந்து நீக்கம் செய்து டிடிவி தினகரன் அறிவிப்பு வெளியிட்டார். மேலும் ஒரு வாரத்தில் எடப்பாடி டீமை வீட்டிற்கு அனுப்புவோம் எனவும் தெரிவித்தார்.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த தம்பிதுரை, அதிமுகவில் பிளவு என்பதே இல்லை எனவும் கட்சியில் இருக்கும் கருத்து வேறுபாடுகளை மீடியாக்கள் பெரிது படுத்தி காட்டக்கூடாது எனவும் தெரிவித்தார்.
இவர் சொல்வது கீழே விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பது போல இருப்பதாக நெட்டிசன்கள் கலாய்க்கின்றனர்.