ப.சிதம்பரத்தை சாதாரண கைதியைப் போல நடத்துவதா...? குறைந்தபட்ச மரியாதைக்கூட கொடுக்கக்கூடாதா..? மம்தா பானர்ஜி வருத்தம்!

By Asianet TamilFirst Published Sep 6, 2019, 8:40 PM IST
Highlights

ஜாமீன் கோரி டெல்லியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால், அவரை விடுவிக்க சிபிஐ எதிர்ப்பு தெரிவித்தது. இதனையடுத்து வரும் 19-ம் தேதி வரை ப.சிதம்பரத்தை நீதிமன்ற காவலில் வைக்க  நீதிமன்றம் உத்தரவிட்டது. 

முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தை ஒரு சாதாரண கைதி போல திஹார் சிறையில் அடைத்து வைத்திருப்பதன் நோக்கம் என்னவென்று புரியவில்லை என மேற்கு வங்க முதல்வரும் திரிணாமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.. 
ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம், 15 நாட்களுக்கும் மேலாக சிபிஐ காவலில் இருந்தார். ஜாமீன் கோரி டெல்லியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால், அவரை விடுவிக்க சிபிஐ எதிர்ப்பு தெரிவித்தது. 
இதனையடுத்து வரும் 19-ம் தேதி வரை ப.சிதம்பரத்தை நீதிமன்ற காவலில் வைக்க  நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து போலீஸ் வண்டியில் ஏற்றப்பட்டு திஹார் சிறைக்கு ப. சிதம்பரம் அழைத்து செல்லப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டார்.  
இந்நிலையில், ப.சிதம்பரம் கைது தொடர்பாகவும் அவர் திஹார் சிறையில் அடைக்கப்பட்டது தொடர்பாகவும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கருத்து தெரிவித்துள்ளார். மாநில சட்டப்பேரவையில் பேசிய மம்தா பானர்ஜி, “ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கின் முழு விவரங்களும் எனக்குத் தெரியாது. ஆனால், முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரத்தை ஒரு சாதாரண கைதியைப் போல நடத்துவதும், அவரை திஹார் சிறையில் அடைத்து வைத்திருப்பதன் நோக்கமும் ஏன் என்று எனக்குப் புரியவில்லை. குறைந்தபட்ச மரியாதையையாவது மத்திய அரசு அவருக்கு கொடுத்திருக்கலாம்” எனத் தெரிவித்தார்.

click me!