நீங்க திருந்தவே மாட்டீங்களா ? ரயில்வே எக்ஸாம் ஆங்கிலம், இந்தியில் மட்டும் தான் என்ற அறிவிப்புக்கு கடும் எதிர்ப்பு !! ஸ்டாலின் எச்சரிக்கை !!

By Selvanayagam PFirst Published Sep 6, 2019, 8:38 PM IST
Highlights

ரயில்வே துறைக்கு நடத்தப்படும் பொதுத் தேர்வுகள் இனி ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டும்தான் நடத்தப்படும் என்ற அறிவிப்புக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீண்டும் தமிழகத்தில் மொழிப் போராட்டத்திற்கான களத்தினை அமைத்திட வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளார்

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் , மத்திய அரசு நிறுவனமான ரயில்வேயில் பணிபுரியும் ஊழியர்களுக்கு நடத்தப்படும் 'துறை சார்ந்த பொதுப் போட்டித் தேர்வை தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் நடத்த தேவையில்லை' என்றும், 'ஆங்கிலத்திலும், இந்தியிலும் மட்டுமே நடத்தினால் போதும்' என்றும், ரயில்வே வாரியம் அறிவித்திருப்பதற்கு திமுக சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்..

இந்தத் தேர்வின் கேள்வித்தாள்கள் மாநில மொழிகளில் இருக்க வேண்டும் என்று எந்த உரிமையும் யாரும் கோர முடியாது' என அறிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. தபால் துறையில் ஏற்கனவே இதுபோன்ற துறைத் தேர்வுகளை மாநிலமொழிகளில் நடத்த முடியாது என்று முதலில் கூறி, பிறகு தி.மு.க. சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குப் போடப்பட்டது. 

அப்போது மத்திய அரசு, 'தபால் துறை தேர்வுகள் இனிமேல் தமிழில் நடத்தப்படும்' என்று உயர்நீதிமன்றத்தில் வாக்குறுதி அளித்து, அதன் அடிப்படையில் அந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

ஆகவே தபால் துறையின் தேர்வுகளை தமிழில் நடத்த முடியும் என்கிற போது,  ரயில்வே துறையில் உள்ள தேர்வுகளை ஏன் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் நடத்த முடியாது என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது.

குறிப்பாக, தமிழிலோ, மலையாளத்திலோ, கன்னடத்திலோ தேர்வு எழுத விருப்பம் தெரிவித்துவிட்டு, சில கேள்விகளுக்கு ஆங்கிலத்தில் பதில் அளித்திருந்தால் அதற்கு மதிப்பெண் கிடையாது என்று ரயில்வே வாரியம் அறிவித்திருப்பது,  அரசியல் சட்டம் அங்கீகரித்துள்ள மாநில மொழிகளுக்கு அப்பட்டமாகச் செய்யும் பச்சைத் துரோகம் மட்டுமல்லாமல் பஞ்சமா பாதகம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கூட்டாட்சித் தத்துவத்தையும், மாநில உரிமைகளையும் பா.ஜ.க. ஆட்சியில் ரயில்வே வாரியம் போன்ற அமைப்புகளும் உரிய முறையில் மதிக்கத் தவறுவது, இந்திய அரசியல் சட்டத்தின் மீது நம்பிக்கையுள்ளவர்களுக்கு மிகுந்த கவலையளிப்பதாக இருக்கிறது. 

ரயில்வே துறையில் இந்தி மொழி கற்றவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து, தமிழ் உள்ளிட்ட மற்ற மாநில மொழி தெரிந்தவர்களை படிப்படியாகக்  குறைக்கும் சதித் திட்டமாகவே இதை திராவிட முன்னேற்றக் கழகம் கருதுகிறது என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

click me!