அமைச்சர் சொன்னா செய்யாமல் இருப்போமா? அதிமுக கரை வேட்டி கட்டி ஊர்வலம் சென்ற தினகரன் அணியினர்...

First Published Mar 2, 2018, 8:24 AM IST
Highlights
wearing admk vetti and rally Dinakaran Team oppose minister speech


இராமநாதபுரம்

இராமநாதபுரத்தில் அதிமுக கரை வேட்டியை தினகரன் அணியினர் கட்ட கூடாது என்ற அமைச்சர் மணிகண்டனின் பேச்சிற்கு எதிர்ப்பு தெரிவித்து தினகரன் அணியினர் அ.தி.மு.க. கரை வேட்டி கட்டிக்கொண்டு ஊர்வலம் சென்று பரபரப்பை ஏற்படுத்தினர்.

இராமநாதபுரத்தில் சில நாள்களுக்கு முன்பு அதிமுக சார்பில் ஜெயலலிதாவின் பிறந்தநாள் பொதுக் கூட்டம் நடைப்பெற்றது.

இந்க் கூட்டத்தில் பங்கேற்று பேசிய அமைச்சர் மணிகண்டன் அ.தி.மு.க.வின் கரை வேட்டியை தினகரன் அணியினர் கட்டக்கூடாது என்று பேசினார்.

அமைச்சர் மணிகண்டனின் இந்தப் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து இராமநாதபுரம் மாவட்ட தினகரன் அணியினர் சார்பில் மாவட்டச் செயலாளர் வது.ந.ஆனந்த் தலைமையில் அ.தி.மு.க. கரை வேட்டி கட்டி ஊர்வலமாக சென்றனர்.

இராமநாதபுரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து நடந்து அமைச்சரின் வீடு வழியாக சென்று அரண்மனை பகுதிக்கு செல்ல திட்டமிட்டு புறப்பட்டனர் தினகரன் ஆதரவாளர்கள்.

ஒன்றியச் செயலாளர்கள் இராமநாதபுரம் முத்தீஸ்வரன், மண்டபம் ஸ்டாலின் ஜெயச்சந்திரன், ராமநாதபுரம் நகர் செயலாளர் ரஞ்சித்,திருப்புல்லாணி களஞ்சியம் என்ற ஜெயச்சந்திரன், மணடபம் முரளிராஜா, நகர் செயலாளர் களஞ்சியராஜா உள்பட நூற்றுக்கணக்கானோர் முழக்கமிட்டபடி அ.தி.மு.க. கரை வேட்டி கட்டி சென்றனர்.

அவர்களை அண்ணா சிலை அருகில் வழிமறித்த துணை காவல் கண்காணிப்பாளர் நடராஜன் தலைமையிலான காவலாளர்கள் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்துச் செல்லும்படி கூறினர். இதனால் காவலாளர்களுக்கு கட்சியினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இறுதியில் அனைவரும் காரில் அரண்மனை சென்று அங்கிருந்து துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அமைச்சர் மணிகண்டனின் பேச்சிற்கு எதிர்ப்பு தெரிவித்து மனு கொடுத்தனர்.

அப்போது மாநில அமைப்புச் செயலாளர் முன்னாள் அமைச்சர் வது.நடராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

பின்னர் மாவட்டச் செயலாளர் வது.ந.ஆனந்த் செய்தியாளர்களிடம் கூறியது:

"இராமநாதபுரம் அரண்மனை பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர் மணிகண்டன் தினகரன் தலைமையிலான எங்களை அ.தி.மு.க.வின் கரை வேட்டியை கட்டக்கூடாது என்று பேசியுள்ளார்.

அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாங்கள் அனைவரும் அ.தி.மு.க. கரை வேட்டி அணிந்து அவரின் வீடு அருகில் இருந்து சென்று துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் மனு கொடுத்துள்ளோம்.

இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் இரண்டு நாள்கள் கழித்து நாள்தோறும் கரைவேட்டியுடன் நடந்து செல்ல திட்டமிட்டு உள்ளோம். மேலும், கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்செல்வன் தலைமையில் இராமநாதபுரத்தில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்" என்று அவர் கூறினார்.

click me!