
ஓ.பன்னீர்செல்வம், பெரியகுளத்தில் உள்ள தனது அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது.
கட்சியில் பொதுச் செயலாளரை தேர்வு செய்வது, பொதுக்குழு மற்றும் செயற்குழு கூடி எடுக்கும் முடிவு கிடையாது. அடிமட்ட தொண்டர்கள் அனைவரும் ஆதரவு தெரிவித்து, வாக்களிக்க வேண்டும். அப்போதுதான், பொது செயலாளராக தேர்வு செய்ய முடியும்.
எம்ஜிஆர் கட்சியை ஆரம்பித்த காலத்தில் அவர் எழுதி வைத்த சட்ட விதிமுறைகளும் அப்படியே உள்ளது. ஜெயலலிதா, பொது செயலாளராக இருந்தபோதும் அதே விதிமுறைகளை கடைபிடிக்கப்பட்டது. அதையே நாங்களும் செய்ய விரும்புகிறோம்.
சசிகலா, அதிமுகவின் பொது செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லாது. அவரை நியமனம் செய்ததும் செல்லாது. அவர், யார் யாரை கட்சியில் இருந்து நீக்கினாரோ அதுவும் செல்லாது. அவருக்கு பதவி என்பதே கிடையாது.
அந்த அடிப்படையில்தான் நாங்கள், தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுத்துள்ளோம். நேற்றும் கூட டெல்லி தலைமை தேர்தல் ஆணையத்தில் மனு கொடுத்துள்ளோம்.
கட்சிக்கான சட்ட விதிகளை எம்ஜிஆர் ஆரம்பித்து வைத்துள்ளார். அதையே நாங்கள் பின்பற்றுகிறோம். கட்சி பொது செயலாளரை தேர்வு செய்தது செல்லாது. அதன்படி உரிய விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி இருகிறோம்.
கட்சிக்கான அடிப்படை கொள்கைகளை கொண்டு நாங்கள் வழி நடத்துவோம். எம்ஜிஆர் கொண்டு வந்த வழியில், ஜெயலலிதாவின் பாதையில் நாங்கள் அடியெடுத்து வைத்து வழி நடத்துவோம்.