
மதுக்கடைக்கு எதிராக பாஜக சார்பில் இன்று போராட்டம் நடந்து வருகிறது. அதில் கலந்து கொண்ட பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன், கட்சி சின்னத்துக்காக சண்டை போட்டு கொள்ளும் ஆளுங்கட்சியினர், தமிழக விவசாயிகளுக்காக எந்த கவலையும் இல்லாமல் இருக்கிறார்கள் என கூறினார்.
இதுகுறித்து தமிழிசை சவுந்தர்ராஜன், செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் மதுக்கடையை மூட வேண்டும் என மக்கள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் அரசும், அமைச்சர்களும் அதை பற்றி யோசிக்கவே இல்லை.
இன்று மதுவுக்கு எதிராக ஒருபுறம் போராட்டம் நடந்து கொண்டு இருக்கிறது. ஆனால், அமைச்சர்கள் ஐஎன்எஸ் போர் கப்பலில் சந்தோஷமாக பயணம் செய்து கொண்டு இருக்கின்றனர். இதை பார்க்கும்போது வேதனை அளிக்கிறது. ஐஎன்எஸ் போர்க்கப்பலை அமைச்சர்கள், கூவத்தூர் விடுதியாகவே மாற்றிவிட்டனர்.
இரட்டை இலை சின்னத்துக்காக அதிமுகவினர் இரு கோஷ்டிகளாக பிரிந்து சண்டை போட்டு கொண்டு இருக்கிறார்கள். ஆனால், பல நாட்களாக போராட்டம் நடத்தும் விவசாயிகளை பற்றி எந்த கவலையும் இல்லாமல் இருக்கின்றனர்.
4 வயது குழந்தைக்காக பிரதமர் மோடி, காரில் இருந்து இறங்கினார். பல்வேறு கோரிக்கைகளுக்காக போராடும் விவசாயிகளை சந்திக்க வரமாட்டாரா என கேள்வி எழுப்புகிறார்கள். நிச்சயம் பிரதமர் மோடி, விவசாயிகளிடம் பேச்சு வார்த்தை நடத்துவார்.