
சொன்னது போல் சேமிப்பு இருந்ததா இல்லையா என்பதை அறிய பில் (கோப்பு) வரும் வரை காத்திருப்போம் என்று தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
தேனீர் விருந்து - புறக்கணித்த திமுக
தமிழக அரசியல் கட்சியினருக்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தேநீர் விருந்துக்கு அழைப்பு விருத்திருந்தார். இந்த விருந்தை ஆளுங்கட்சியான திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியன் கம்யூனிஸ்ட் கட்சி, மமக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்தன. ஆளுநர் அளித்த விருந்தில் அதிமுக, பாஜக, பாமக தலைவர்கள் மட்டுமே பங்கேற்றனர். முன்னதாக திமுக தேனீர் விருந்தை புறக்கணிப்பதாக திமுகவைச் சேர்ந்த அமைச்சர்கள் பொன்முடி, தங்கம் தென்னரசு ஆகியோர் அறிவித்ததும், இதுபற்றி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அண்ணாமலை கிண்டல்
அதற்கு பதிலளித்த அண்ணாமலை, "ஆளுநருக்கு டீ செலவு மிச்சம். மக்கள் வரிப்பணம் கொஞ்சம் மிச்சமாகிறது. ஆளுநர் என்பவர் தமிழக மக்களின் பிரதிநிதி. ஆளுநர் விருந்துக்கு அழைப்பது என்பது காலங்காலமாக உள்ள மரபு. தமிழக அமைச்சரவை எடுத்த முடிவு என்பதற்காக மாண்பு கருதியே திமுக அரசு எழுதி கொடுத்ததை அப்படியே ஆளுநர் உரையில் படித்தார் ஆளுநர். அப்போது மாண்பு இருந்தது, இப்போது இல்லையா. அனைத்தையும் அரசியல் செய்ய வேண்டும் திமுக நினைக்கிறது. ஆளுநர் 11 மசோதாக்களையும் திருப்பி அனுப்பியதற்கான காரணங்களைப் பட்டியலிட்டுள்ளார். அதை திமுக அரசு வெள்ளை அறிக்கையாக வெளியிடுமா?" என்று தெரிவித்திருந்தார்.
விசிக எம்.எல்.ஏ. பதிலடி
அண்ணாமலையின் இந்தக் கருத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்எல்ஏ ஆளூர் ஷாநவாஸ் உடனே பதிலடி கொடுத்தார். "பெட்ரோல், டீசல் விற்கும் விலையில் ஆளுநர் மாளிகைக்கு சென்று வர ஆகும் டீசல் செலவு மிச்சம் என எங்களாலும் சொல்ல முடியும். தமிழ்நாட்டின் உரிமை பிரச்சனைக்கான புறக்கணிப்பை தேநீர் செலவு மிச்சம் என மலினப்படுத்தக்கூடாது” என்று பதிலடி கொடுத்திருந்தார். இந்நிலையில் ஆளூர் ஷாநவாஸின் பதிலுக்கு தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இன்னொரு பதிலை ட்விட்டரில் அளித்துள்ளார்.
நிதியமைச்சர் விளக்கம்
அதில், “இன்னொரு அம்சத்தையும் குறிப்பிட மறந்து விடாதீர்கள், ஆளூர் ஷாநாவஸ் சகோதரரே. இந்த தேநீர் விருந்து யாருடைய தனிப்பட்ட நிதியிலிருந்தும் வழங்கப்படுவதில்லை. தமிழ் மக்களின் பணம் செலவிடப்படுகிறது. சொன்னது போல் சேமிப்பு இருந்ததா இல்லையா என்பதை அறிய பில் (கோப்பு) வரும் வரை காத்திருப்போம்" என்று பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.