நாங்கதான் ஆக்சிஜன் உற்பத்தி செய்வோம்... தமிழக அரசால் முடியாது... மீண்டும் நீதிமன்றம் சென்ற ஸ்டெர்லைட்!

By Asianet TamilFirst Published Apr 25, 2021, 10:17 PM IST
Highlights

ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு கையகப்படுத்தி ஆக்சிஜன் தயாரிக்க அனுமதி வழங்கக் கூடாது. அந்தப் பணியை எங்களிடமே ஒப்படைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் திடீரென கூடுதல் மனு தாக்கல் செய்துள்ளது.
 

நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாகியுள்ள நிலையில், சில வட மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக கொரோனா நோயாளிகள் மரணமடைந்து வருகின்றன. இதனையடுத்து பல தொழிற் நிறுவனங்களும் போர்க்கால அடிப்படையில் ஆக்சிஜன் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் தூத்துக்குடியில் மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து தினமும் ஆக்சிஜன் தயாரித்துக் கொடுக்க ஆலையைத்திறக்க அனுமதிக்க வேண்டும் என்று வேதாந்தா நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, ஆக்சிஜன் தயாரிக்க ஸ்டெர்லைட் ஆலை இயங்க அனுமதிக்கலாம் என்று மத்திய அரசு பதில் அளித்தது. ஆனால், இதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்தது. 2018-ல் நடந்ததுபோல இன்னொரு துப்பாக்கிச்சூடு சம்பவத்தை அரசு விரும்பவில்லை எனத் தமிழக அரசு ஆட்சேபம் தெரிவித்தது. இதனையடுத்து அரசே ஆலையை ஏற்று ஆக்சிஜன் தயாரிக்கலாமே என உச்ச நீதிமன்றம் ஆலோசனை கூறியது. இதுகுறித்து அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்வதாக தமிழக அரசு நீதிமன்றத்தில் தெரிவித்தது. பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்வது குறித்து அனைத்துக் கட்சிக்கூட்டத்தை கூட்டி ஆலோசனை  நடத்த உள்ளார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.
இந்நிலையில் வேதாந்தா நிறுவனம் கூடுதலாக இன்னொரு மனுவை தாக்கல் செய்துள்ளது. அதில், “ஸ்டெர்லைட்  ஆலையில் பராமரிப்புப் பணியைச் செய்துவிட்டு ஆக்சிஜன் மட்டுமே தயாரிக்கிறோம். முதன் முதலில் ஸ்டெர்லைட்டில் ஆக்சிஜன் உற்பத்தியை தொடங்கியபோது அதற்காகப் பயிற்சி பெற 3 மாதம் வரை ஆனது. தற்போது தமிழக அரசிடம் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய நிபுணத்துவம் பெற்ற வல்லுனர்கள் இல்லை. எனவே ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு கையகப்படுத்தி ஆக்சிஜன் தயாரிக்க அனுமதி வழங்கக் கூடாது.


பயிற்சி இல்லாதவர்கள் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியில் ஈடுபட்டால், அது தொழிலாளர்களுக்கு  உயிருக்கு ஆபத்தாக முடியும்  நிலை ஏற்படலாம். எனவே எங்களிடமே ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் பணியை ஒப்படைக்க வேண்டும். தற்போது ஆக்சிஜன் பற்றாக்குறை உள்ளது. அதை போக்குவதற்கு ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்து அரசுக்கு வழங்க தயாராக இருக்கிறோம்” என்று மனுவில் தெரிவித்துள்ளது. 

click me!