ஸ்டெர்லைட்டில் ஆக்சிஜன் உற்பத்திக்கு முன் வர வேண்டும்... தமிழக அரசுக்கு டாக்டர் சங்கம் அதிரடி கோரிக்கை.!

By Asianet TamilFirst Published Apr 25, 2021, 9:06 PM IST
Highlights

உச்ச நீதிமன்றத்தின் வேண்டுகோளின் அடிப்படையில், மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையில் கொரோனா பெருந்தொற்று பாதிப்பு முடிகிற வரை, கொரோனா நோயாளிகளுக்காக மருத்துவ ஆக்சிஜினை மட்டும் உற்பத்தி செய்யலாம் என சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
 

இதுகுறித்து அச்சங்கத்தின் பொதுச்செயலாளர் மருத்துவர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஏராளமான கொரோனா நோயாளிகள் மூச்சுத் திணறி இறக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. அந்தக் கோரமான காட்சிகள் நமது மனங்களை கடும் வேதனைக்கு உள்ளாக்குகிறது. இந்த ஆக்சிஜன் பற்றாக்குறையைப் போக்கிட போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்திட வேண்டும். ஒவ்வொரு கொரோனா நோயாளிக்கும் சிகிச்சைக்காகத் தேவைப்படும் ஆக்சிஜன், கொரோனா அல்லாத மற்ற நோயாளிகளைவிட அதிக அளவில் பல நாட்களுக்குத் தேவைப்படுகிறது. கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் மிக அதிக வேகத்தில் அதிகரித்துவருகிறது. இதனால் ஆக்சிஜன் தேவையும் மிக அதிக அளவில் அதிகரித்து வருகிறது.

தமிழகத்திலும் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படும் நிலை வரலாம். ஆக்சிஜன் பற்றாக்குறையைப் போக்கிட, பொதுத்துறை மற்றும் தனியார் துறைகளின் மூலம் உற்பத்தியைப் பெருக்கிட வேண்டும். தொழில்துறைக்கு ஆக்சிஜன் பயன்படுத்தப்படுவதை உடனடியாக நிறுத்திட வேண்டும். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூலம் ஒவ்வொரு நாளும் 1050 மெட்டிரிக் டன் அளவிற்கு மருத்துவ ஆக்சிஜனை உற்பத்திச் செய்ய முடியும் எனக் கூறப்படுகிறது. இது ஒட்டு மொத்த தமிழகத்தின் உற்பத்தித் திறனான 400 மெட்ரிக் டன்னைவிட இரண்டரை மடங்கு அதிகம். உச்ச நீதிமன்றமும் அந்த ஆலையை தமிழக அரசே ஏற்று ஆக்சிஜனை உற்பத்தி செய்ய ஏன் முன்வரக்கூடாது என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.


உச்ச நீதிமன்றத்தின் இந்த வேண்டுகோளின் அடிப்படையில், மூடப்பட்டுள்ள அந்த ஆலையில் கொரோனா பெருந்தொற்று பாதிப்பு முடிகிற வரை, கொரோனா நோயாளிகளுக்காக மருத்துவ ஆக்சிஜினை மட்டும் உற்பத்தி செய்யலாம். மக்களின் உயிரை காத்திட மருத்துவ ஆக்சிஜன் மிக மிக முக்கியமான தேவையாக மாறியுள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். கொள்ளை நோய் தடுப்புச் சட்டம், பேரிடர் மேலாண்மைச் சட்டம் போன்றவற்றின் அடிப்படையில் அந்நிறுவனத்தை உடனடியாக தமிழக அரசே கையகப்படுத்தி, தமிழக அரசே நேரடியாக, அனைத்துக் கட்சித் தலைவர்களின் ஒப்புதலுடன் நியமிக்கப்படும் நடுநிலையான நிபுணர்கள் குழு, மற்றும் உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்படும் நிபுணர்கள் குழு மற்றும் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புப் போராட்டக்குழு பிரதிநிதிகளின் கூட்டு மேற்பார்வையில், முழுமையான பாதுகாப்புடன் மருத்துவ ஆக்சிஜனை மட்டும் உற்பத்தி செய்யலாம்.

இதன் மூலம் தமிழகம் உட்பட பல மாநிலங்களின் ஆக்சிஜன் தேவையை உடனடியாக நிறைவு செய்திட முடியும். ஆக்சிஜன் தட்டுப்பாட்டைப் போக்கிட முடியும். ஆயிரக்கணக்கான கொரோனா நோயாளிகளின் உயிர்களைக் காத்திட முடியும். கொரோனா நோயாளிகளின் நலன் கருதி, மனிதநேய அடிப்படையில் இதை உடனடியாகச் செய்யலாம். தற்பொழுது, கொரோனா மிக வேகமாகப் பரவுவதால், அதைத் தடுப்பதற்கு அடுத்தக் கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதும் அவசியம். இது காபந்து அரசு என்பதால், அனைத்துக் கட்சிகளையும் கலந்து பேசி ஜனநாயக ரீதியான முடிவுகளை அரசு மேற்கொள்ள வேண்டியது அவசியம். எனவே, இது போன்ற அவசர அவசிய கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதித்திடவும், மருந்துகள், தடுப்பூசிகள், ஆக்சிஜன் பற்றாக்குறை பற்றி பேசி முடிவெடுத்திடவும், அனைத்துக் கட்சிக் கூட்டத்தை உடனடியாக கூட்டிட வேண்டும்” என்று அறிக்கையில் மருத்துவர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார்.
 

click me!