மோடி அரசு செய்த இந்தச் செயலை நியாயப்படுத்தவே முடியாது... அன்புமணி ராமதாஸ் ஆவேசம்..!

By Asianet TamilFirst Published Apr 25, 2021, 8:46 PM IST
Highlights

புதிய தேசியக் கல்விக் கொள்கை-2020-ன் ஆவணத்தை தமிழிம் மொழி மாற்றம் செய்யத் தவறியதை மத்திய அரசு நியாயப்படுத்த முடியாது என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
 

இதுதொடர்பாக அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில்,  “மத்திய அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்ட புதிய தேசியக் கல்விக் கொள்கை-2020 தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட 17 மொழிகளில் வெளியிடப்பட்டிருக்கிறது. உலகின் மூத்த மொழியான தமிழில் புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு மொழிமாற்றம் செய்து வெளியிடாதது மிகவும் வருத்தமளிக்கிறது. இந்தியாவின் புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு கடந்த ஆண்டு ஜூலை 29-ம் தேதி மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. அதைத் தொடர்ந்து புதிய கல்விக் கொள்கையில் இடம்பெற்றுள்ள பல்வேறு அம்சங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், புதிய தேசிய கல்விக் கொள்கை ஆவணம் கன்னடம், மலையாளம், தெலுங்கு, கொங்கணி, குஜராத்தி, காஷ்மீரி, நேபாளி, ஒடியா, அசாம், பெங்காலி, போடோ, மராத்தி, பஞ்சாபி, டோக்ரி, மைதிலி, மணிப்புரி, சந்தாலி ஆகிய 17 மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளன. ஆனால், தமிழ் மொழியில் இந்த ஆவணம் வெளியிடப்படவில்லை. புதிய கல்விக் கொள்கையின் பல அம்சங்களுக்கு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. ஆனாலும், புதிய கல்விக் கொள்கை இந்தியாவின் அதிகாரப்பூர்வ ஆவணமாக ஏற்றுக் கொள்ளப்பட்டுவிட்ட நிலையில், அதை அனைத்து மொழிகளிலும் வெளியிடுவதுதான் நியாயமானதாக இருக்கும்.
அதன்படி எட்டாவது அட்டவணையில் உள்ள தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளிலும் புதிய தேசியக் கல்விக் கொள்கை ஆவணம் வெளியிடப்பட்டிருக்க வேண்டும். குறிப்பாக எட்டாவது அட்டவணை மொழிகளில் அதிக அளவிலான மக்களால் பேசப்படும் தமிழ் மொழியில் புதிய கல்விக் கொள்கை வெளியிடப்பட்டிருக்க வேண்டும். அதை மத்திய அரசு செய்யத் தவறியதை நியாயப்படுத்த முடியாது. மத்திய அரசின் தமிழ் மொழிக்கு எதிரான இந்த அணுகுமுறை தவறானது. இந்தத் தவற்றை மத்திய அரசு உடனடியாக சரி செய்ய வேண்டும்.
புதிய கல்விக் கொள்கையை உடனடியாக தமிழ் மொழியிலும் மொழி மாற்றம் செய்து வெளியிட மத்திய அரசு முன்வர வேண்டும்.

எதிர்காலத்தில் இத்தகைய சிக்கல் மீண்டும் ஏற்படாமல் தடுக்க தமிழ் உள்ளிட்ட எட்டாவது அட்டவணையில் 22 மொழிகளையும் இந்தியாவின் அலுவல் மொழிகளாக அறிவிக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்று அறிக்கையில் அன்புமணி தெரிவித்துளார்.
 

click me!