சசிகலா ரிலீசாகி வந்தாலும் சேர்த்துக் கொள்ள மாட்டோம்... எடப்பாடிக்காக டப்பிங் வாய்ஸ் கொடுத்த ஜெயகுமார்..!

By Thiraviaraj RMFirst Published Sep 5, 2020, 4:09 PM IST
Highlights

ஓ.பி.எஸ், சசிகலாவின் வருகையை எதிர்நோக்கி காத்திருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில், அமைச்சர் ஜெயக்குமாரின் இந்தப்பேச்சு  எடப்பாடி பழனி சாமியின் பின்னணிக்குரலாகவே பார்க்கப்படுகிறது. 
 

சசிகலாவையும், அவரது குடும்பத்தினரையும் கட்சியிலும், ஆட்சியிலும் தலையிடவிடக்கூடாது என்பதே அதிமுகவின் நிலைப்பாடு என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். 

சுதந்திரப்போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் 149வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னையில் அவரது சிலைக்கு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ’’ரஜினி கட்சி ஆரம்பிப்பது குறித்து நான் தற்போது கருத்து கூற முடியாது. அதிமுகவை யாரும் கட்டுப்படுத்த முடியாது. சசிகலாவையும்,  அவரது குடும்பத்தினரையும் கட்சியிலும், ஆட்சியிலும் தலையிடவிடக்கூடாது என்கிற நிலைப்பாட்டில் தொடர்ந்து உறுதியாக இருக்கிறோம்.

ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மாற்றப்பட்டதில் அரசியல் தலையீடு இல்லை. இது நிர்வாக ரீதியிலான நடவடிக்கை. பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, அமைச்சர்கள் குறித்து தெரிவித்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்த ஜெயக்குமார், அமைச்சர்களை பேச வேண்டாம் என்று சொல்ல ஹெச்.ராஜா யார்? கூட்டணியில் இருப்பவர்கள் தார்மீக பொறுப்பு, கடமையை கடைபிடிக்க வேண்டும்’’ என அவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். 

 சசிகலா குறித்த அமைச்சர் ஜெயகுமாரின் இந்தப்பேச்சு அரசியல் ரீதியாக முக்கியத்துவம் பெற்றுள்ளது. காரணம் பல அமைச்சர்கள் சசிகலா வருகைக்காக காத்திருப்பதாக வெளிப்படையாகவே கூறி வருகின்றனர். சசிகலா ரிலீஸானால் அதிமுக ஒன்றிணைந்து அதற்கு அவர் தலைமையேற்பார் என்றும் கூறப்பட்டு வந்தது. ஓ.பி.எஸ், சசிகலாவின் வருகையை எதிர்நோக்கி காத்திருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில், அமைச்சர் ஜெயக்குமாரின் இந்தப்பேச்சு  எடப்பாடி பழனி சாமியின் பின்னணிக்குரலாகவே பார்க்கப்படுகிறது. 

எடப்பாடி பழனிசாமி ஆதரவாளராக இருக்கும் ஜெயக்குமார் எடப்பாடியின் ஒப்புதல் இல்லாமல் இப்படியொரு கருத்தை தெரிவித்திருக்க வாய்ப்பில்லை என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். 

click me!