
மத்திய பல்கலைகழகங்களில் நுழைவுத்தேர்வு:
2022 -23 கல்வியாண்டு முதல் தேசிய தேர்வுகள் முகமை மூலம் யுஜிசி யின் கீழ் இயங்கும் அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்கள் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு கட்டாயம் நடத்தப்படும் என்றும் அதில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கை இருக்கும் என்றும் யுஜிசி சேர்மன் ஜெகதீஷ் கூறினார். மேலும் சியுஇடி(Entrance test for central universities) தேர்வால், அனைத்து கல்வி வாரியங்களிலும் பயிலும் மாணவர்களுக்கும், வடகிழக்கு மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கும் மத்திய பல்கலைக்கழகங்களில் சமவாய்ப்பு கிடைக்கும் என்று கூறிய அவர், சியுஇடி மதிப்பெண்ணை மாநில பல்கலைக்கழகங்கள், தனியார் பல்கலைக்கழகங்கள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் கூட பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவித்தார்.
யுஜிசியின் புது அறிவிப்பு:
மேலும் பேசிய அவர், முதுநிலை பட்டப்படிப்பைப் பொறுத்தவரை ஏற்கெனவே நிறைய பல்கலைக்கழகங்கள் தனிப்பட்ட முறையில் நுழைவுத் தேர்வு நடத்துகின்றன. இனி அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களுமே சியுஇடி நுழைவுத் தேர்வு முறையைப் பின்பற்றும் என்று திட்டவட்டமாக கூறினார். பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசியின்) கீழ் நாடு முழுவதும் 45 மத்திய பல்கலைக்கழகங்கள் உள்ளன. இவை அனைத்திலும் இளநிலை, முதுநிலை படிப்புகள் அனைத்திற்குமே நுழைவுத் தேர்வு நடத்தப்படும். இந்த நுழைவுத் தேர்வுக்கான வினாத்தாள் 12 ஆம் வகுப்பு NCERT பாடத்திட்டத்தின் அடிப்படையில் தயாரிக்கப்படும். இதனிடயே நுழைவுத்தேர்வானது, Section 1A, Section 1B, பொதுத் தேர்வு மற்றும் பாடப்பிரிவு சார்ந்த தேர்வு எனும் வகையில் வடிவமைக்கப்படும் என்றார்.
இளநிலை படிப்புக்கு நுழைவுத்தேர்வு:
Section 1A வில் ஆங்கிலம், இந்தி, அசாமி, வங்காளம், குஜராத்தி, மலையாளம், மராத்தி, ஒடியா, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு, உருது மொழிகள் இருக்கும். Section 1B யில் பிரெஞ்சு, அரபி, ஜெர்மன் உள்ளிட்ட பிறமொழிப்பாடங்களை தேர்வு செய்து படிக்கலாம். பாடவாரியான தேர்விக் மாணவர்கள் குறைந்தது 6 பாடங்களை தேர்வு செய்யலாம். அதாவது இளநிலையில் படிக்க விரும்பும் ஏதேனும் 6 பாடங்களை தேர்வு செய்யலாம். இந்தத் தேர்வை மாணவர்கள் எதிர்கொண்டு இதில் வரும் மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவர்கள் மத்திய பல்கலைக்கழகங்களில் சேர முடியும் என்று விளக்கினார்.
தமிழகத்தில் அனுமதி இல்லை:
இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் மதிப்பெண் கட் ஆஃப் நிர்ணயிக்கப்படும். ஆகவே இட ஒதுக்கீட்டுக் கொள்கையில் எந்த பின்னடைவும் வராது. மேலும், இத்தேர்வில் வெற்றி பெறும் மாணவர்கள் பொது கவுன்சிலிங்கில் கலந்து கொள்ள வேண்டிய அவசியம் இருக்காது என்றும் கூறியிருந்தார். இந்நிலையில் தான், இன்று சட்டப்பேரவையில் பேசிய, பாமக சட்டமன்றக் குழுத் தலைவர் ஜி.கே.மணி, "மத்தியப் பல்கலைக்ககழக மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அனுமதிக்கக்கூடாது" என்று தெரிவித்தார். இதற்கு பதிலளித்து பேசிய உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி "எந்தக் காலத்திலும் தமிழகத்தில் உள்ள கலை, அறிவியல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு வைக்கப்படமாட்டாது. நுழைவுத் தேர்வு தமிழகத்தில் எந்த ரூபத்தில் நுழைய முயற்சித்தாலும் அதனை எதிர்ப்போம் என்று அவர் கூறினார்.
மேலும் படிக்க: மத்திய பல்கலை. சேர்க்கைக்கு நுழைவு தேர்வு கட்டாயம்... அறிவித்தது யுஜிசி!!