எஸ்பி வேலுமணிக்கு எதிராக எங்களிடம் ஆதாரங்கள் உள்ளது... தமிழக அரசு அதிரடி!!

Published : Apr 03, 2022, 08:31 PM IST
எஸ்பி வேலுமணிக்கு எதிராக எங்களிடம் ஆதாரங்கள் உள்ளது... தமிழக அரசு அதிரடி!!

சுருக்கம்

அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணிக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் உள்ளதாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணிக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் உள்ளதாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதிமுக ஆட்சியின் போது உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணி தனது  சகோதரர்கள், நெருங்கிய உறவினர்கள், நண்பர்களின் நிறுவனங்களுக்கு பல கோடி ரூபாய் மதிப்புள்ள மாநகராட்சி, நகராட்சி  ஒப்பந்தங்களை முறைகேடாக வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக அவர் மீது அறப்போர் இயக்கம் சார்பிலும், திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம்,  எஸ்.பி.வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கில் புலன் விசாரணையை முடித்து 10 வாரங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட்டது.

சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் எஸ்.பி.வேலுமணி மேல்முறையீடு செய்தார். மாநில அமைச்சர் என்ற முறையில் கொள்கை முடிவுகளை மட்டுமே எடுத்ததாகவும், மாநகராட்சி, நகராட்சி டெண்டர் நடைமுறைகளில் நான் எப்போதும் தலையிடுவதில்லை எனவும் குறிப்பிட்டிருந்தார். உயர்நீதிமன்றத்தின்  உத்தரவிற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார். கடந்த மாதம் இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் தமிழக காவல்துறை மற்றும் அறப்போர் இயக்கத்துக்கு நோட்டிஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

இந்நிலையில் தற்போது அந்த வழக்கில் தமிழக அரசு பதில் மனுவை தாக்கல் செய்துள்ளது. டெண்டர் முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக ஆதாரங்கள் உள்ளன. ஆதாரங்கள் எல்லாம்  திரட்டப்பட்டுவிட்டன என்றும் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. தன் மீதான இந்த வழக்கில் நீதிமன்றத்தில் உண்மைக்கு புறம்பான தகவல்களை எஸ்.பி.வேலுமணி தெரிவிக்கிறார் எனவும் தமிழக அரசு குற்றம் சாட்டி உள்ளது. டெண்டர் முறைகேடு வழக்கில் எஸ்.பி.வேலுமணிக்கு எவ்வித சலுகைகளையும் வழங்கக் கூடாது என மனுவில் குறிப்பிட்டுள்ளது. நாளை இந்தவழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர யுள்ள நிலையில் தமிழக அரசு பதில்மனு தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!