
திருப்பத்தூர் மாவட்டத்தில் வேன் கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாதுமலை புதூர்நாடு அடுத்த புலியூர் கிராமத்தை சேர்ந்த 30 பேர் டாடா ஏஸ் வாகனத்தில் சேம்பரை பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றுள்ளனர். அப்போது வாகனம் கட்டுபாட்டை இழந்து 50 அடி ஆழம் பள்ளத்தில் நிலை தடுமாறி விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வாகனத்தில் பயணம் செய்த 11 பேர் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர். மேலும் இந்த விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை அப்பகுதி மக்கள், தீயணைப்பு துறையினர் மற்றும் காவல் துறையினர் மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
படுகாயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து திருப்பத்தூர் கிராம காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரண உதவி அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் வட்டம், நெல்லிவாசல் நாடு மதுரா புலியூர் கிராமத்தைச் சேர்ந்த சுமார் 30க்கும் மேற்பட்ட நபர்கள் சேம்பரை கிராமத்தில் அமைந்துள்ள கோவிலுக்கு வேன் மூலம் சென்ற போது எதிர்பாராதவிதமாக வேன் கவிழ்ந்து பள்ளத்தில் விழுந்ததில் 11 பேர் உயிரிழந்துவிட்டனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் இதே விபத்தில் சுமார் 22 நபர்கள் படுகாயம் அடைந்துள்ளார்கள். அவர்களுக்கு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சைகள் அளிக்கவும் மீட்புப் பணிகளை துரிதமாக மேற்கொள்ளவும் உத்தரவிட்டுள்ளேன். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு தலா 2 இலட்சம் ரூபாயும், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் உடனடியாக முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிதியுதவி வழங்கிட உத்தரவிட்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.