
ஆர்.கே. இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஓரிரு நாளில் முடிவு அறிவிக்கப்படும் என்று மக்கள் நல கூட்டியக்கத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
இடைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் போராட்ட பூமியான தமிழகம் தற்போது தேர்தல் ஜுரத்தால் தகித்து வருகிறது. இதற்கிடையே ஆர்.கே. நகர் தேர்தல் குறித்து மக்கள் நலக் கூட்டியக்கத் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் சென்னை தியாகராயநகரில் இன்று நடைபெற்றது. இதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் இதில் பங்கேற்றனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கூட்டத்தில் பங்கேற்கவில்லை....
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஜி.ராமகிருஷ்ணன், " ஜனநாயக முறைப்படி இடைத்தேர்தலை நடத்த வேண்டும் என்றார். தேர்தலில் பங்கேற்பது குறித்த கேள்விக்கு நேரடியாக பதில் சொல்வதைத் தவிர்த்த ராமகிருஷ்ணன், மாற்றுத்திட்டங்களை முன்வைத்து மக்களை சந்திக்கப்போவதாகக் கூறினார்.
இதன்பின்னர் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், " மீனவர் பிரிட்ஜோ சுட்டுக் கொல்லப்பட்டதற்கு மக்கள் நலக்கூட்டியக்கம் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது. ஆந்திராவில் தமிழர்கள் கைது செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது. ஆர்.கே.நகரில் போட்டியிடுவது குறித்து ஓரிரு நாளில் முடிவு அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
நேற்று கட்சி தொடங்கிய தீபா கூட தேர்தலில் பங்கேற்பது என முடிவு செய்து அதற்கான முன்னேற்பாட்டு நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்கியுள்ளார். ஆனால் அரசியல் நீண்ட நெடிய அனுபவம் பெற்றிருக்கும் தலைவர்களைக் கொண்ட மக்கள் நலக்கூட்டணி இயக்கம், ஆலோசனை நடத்துகின்றோம் என்று அறிவித்திருப்பது ஆரோயக்கிமானது தானா?