
திட்டங்களை நிறைவேற்ற முதல்வர் காட்டும் வேகத்திற்கு அமைச்சர் , அதிகாரிகளால் ஈடு கொடுக்க முடியவில்லை என சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் சிறுபான்மையினர் உரிமை நாள் விழா சென்னை மயிலாப்பூரில் உள்ள சாந்தோம் பள்ளியில் நடைபெற்றது. சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் வரவேற்புரையாற்றினார். மேலும் இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கீதா ஜீவன், நாசர், மனோ தங்கராஜ், நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தலைமையில் உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.
அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேச்சு: தனது அரசு மைனாரிட்டி அரசு அல்ல.. மைனாரிட்டிகளுக்கான அரசு என்று சொன்னவர் கருணாநிதி. பெரியார் , அண்ணா , கருணாநிதி , அன்பழகன் , காமராசர் , காயிதே மில்லத் , அம்பேத்கர் போன்றவர்கள் இன்று இல்லை, ஆனால் அவர்களது கருத்தை உள்வாங்கி மக்களின் முதல்வராக ஸ்டாலின் இருக்கிறார். கருணாநிதியிடம் இருந்து பெற்ற அறிவு , ஆற்றல் , திறமை , தன்னம்பிக்கையுடன் ஸ்டாலின் செயல்படுகிறார். கருணாநிதி முதல்வராக இருந்தபோது நெல்லையில் நடைபெற்ற திமுக மாநாட்டில் அரசின் சாதனைகளை விளக்கும் விதமாக இயக்கப்பட்ட சமத்துவபுர மாதிரியில் அலங்கரிக்கப்பட்ட பேருந்துக்கு என்னை தலைமையேற்று அமர வைத்தார். அவரது மகன் ஸ்டாலின் சிறுபான்மை இனத்தில் பிறந்த என்னை அமைச்சராக்கி அழகு பார்க்கிறார்.
கீதா ஜீவன் பேச்சு: திட்டங்களை நிறைவேற்றுவதில் அமைச்சர்கள் , அதிகாரிகளால் முதலமைச்சரின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியவில்லை. அவ்வளவு வேகமாக செயல்படுகிறார்.சாதி, மத வேறுபாடற்று தமிழர் என்ற உணர்வை மட்டும் நாம் கொள்ள வேண்டும். பெண்கள் , குழந்தைகளுக்கு எதிரான குற்றவாளிகள் மீது எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து ஊடகங்களுக்கு முறையாக தெரிவித்து வருகிறோம் , அது போன்ற குற்றங்களை குறைக்க முதலமைச்சர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார். கரண்டிக்கு பதிலாக பெண்களின் கையில் புத்தகம் கொடுக்க வேண்டும் என பெரியார் சொன்னதை செய்தது கிறத்தவ மிஷனரிகள்தான்
அமைச்சர் மனோ தங்கராஜ் பேச்சு: கடந்த காலத்தில் தமிழகத்தில் வழிபாட்டுரிமைக்கே அச்சுறுத்தல் இருந்தது. சிறுபான்மை என்ற வார்த்தைக்கு சமூக ஊனம் என்று அர்த்தம். மத அரசியல் நடத்துவோர் குறித்து தமிழக மக்கள் கவனமாக இருக்க வேண்டும்.கன்னியாகுமரி மாவட்டத்தில் நான் பங்கேற்ற கோயில் குடமுழுக்கு நிகழ்வு ஒன்றில் விஷ்வ இந்து பரிசத் அமைப்பை சேர்ந்த நபர் கன்னியாஸ்திரிகள் , ஸ்டேன் சுவாமி போன்றவர்களுக்கு எதிராக விசத்தை கக்கும் விதமாக , மத துவேசத்துடன் பேசினார். நான் அந்த மேடையில் பேசும்போது விவேகானந்தர் பற்றி பேசினேன்.விவேகானந்தர் அமெரிக்காவில் சமயப் பொறுமை குறித்து பேசினார் . ஆர்எஸ்எஸ் சித்தாந்தவாதிகள் விவேகானந்தரின் பேச்சை இன்று ஏற்பார்களா என்பதே சந்தேகம்தான். நல்லோர் பேசியதை மூடி மறைத்து , தேவையான சிலவற்றை மட்டும் எடுத்து கொள்கிறார்கள்.
பீட்டர் அல்போன்ஸ் பேச்சு: இந்தியாவில் சிறுபான்மையின மக்கள் பிரதிநிதிகள் அதிகம் உள்ள மாநிலமாக தமிழகம் இருக்கிறது. தமிழகத்தில் 22 விழுக்காடு அளவு மதச் சிறுபான்மையினர் வாழ்ந்து வருகின்றனர். அநாதை பிணங்களைக் கூட தமது தோளில் சுமந்து அடக்கம் செய்தவர்கள் இசுலாமியர்கள். மத மாற்றம் செய்வதற்காக பள்ளிகளையும் , தொண்டு நிறுவனத்தையும் நடத்துவதாகவும் , இரவு நேரத்தில் பிரசாரம் செய்வதாகவும் சிறுபான்மையினர் குறித்து சிலர் கூறுவது குறப்பிட்ட ஒரு கட்சியை வளர்ப்பதற்காக சொல்லப்படும் பொய் குற்றச்சாட்டு , இதில் உண்மை இல்லை " என்று கூறினார்