அடக்குமுறையைக் கண்டித்து புறக்கணிக்கிறோம்... மோடி அரசுக்கு மெசேஜ் சொன்ன திருமாவளவன்..!

By Asianet TamilFirst Published Jan 28, 2021, 10:21 PM IST
Highlights

போராடுகிற விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் மத்திய அரசின் அடக்குமுறையைக் கண்டிக்கும் வகையிலும்  குடியரசுத் தலைவர் உரையை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி புறக்கணிக்கிறது என்று விசிக  தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
 

இதுதொடர்பாக திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்திய அரசு அனைத்து விதமான நாடாளுமன்ற நடைமுறைகளையும் புறக்கணித்துவிட்டு நிறைவேற்றியுள்ள மக்கள் விரோத வேளாண் சட்டங்கள் மூன்றையும் திரும்பப் பெறுமாறு வலியுறுத்தி இரண்டு மாதங்களுக்கும் மேலாக லட்சக்கணக்கான விவசாயிகள் டெல்லியின் எல்லைகளில் அறவழியில் போராடி வருகின்றனர். அவர்களது கோரிக்கையை ஏற்காதது மட்டுமின்றி அவர்கள் மீது வன்முறையை ஏவிய மத்திய அரசின் கொடுஞ்செயலை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

 
மாநில உரிமைகளுக்கு எதிரான, கோடிக்கனக்கான மக்களின் உணவுப் பாதுகாப்பைப் பறிக்கிற மத்திய அரசின் ஆணவப் போக்கைக் கண்டித்து குடியரசுத் தலைவர் உரையை விடுதலை சிறுத்தைகள் கட்சி புறக்கணிக்கிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். கடும் குளிரிலும், கொட்டும் மழையிலும் லட்சக்கணக்கான விவசாயிகள் மோடி அரசின் வேளாண் விரோத சட்டங்களை ரத்து செய்யக்கோரி கடந்த 64 நாட்களாக போராடி வருகின்றனர். இந்த அறவழிப் போராட்டத்தில் இதுவரை 155 பேர் உயிரிழந்துள்ளனர். அவ்வாறு இருந்தும் மோடி அரசு மனம் இரங்கவில்லை. குடியரசு தினத்தன்று விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணி அமைதியாகவே நடந்தது. 
அதில் பாஜக ஆதரவாளர்கள் சிலர் உள்ளே புகுந்து வன்முறையில் ஈடுபட்டனர். இதனால் காவல்துறையினர் சிலருக்குக் காயம் ஏற்பட்டுள்ளது. இந்த வன்முறைச் சம்பவங்கள் கண்டிக்கத்தக்கவை. போராடும் விவசாய சங்கத்தின் தலைவர்களும் கூட இந்த வன்முறையைக் கண்டித்துள்ளனர். இதன் பின்னே இருந்த நபர்கள் யார்? அவர்களை இப்படி தூண்டியது யார்? என்பதைப்பற்றி உச்சநீதிமன்றத்தின் பணியிலுள்ள நீதிபதி ஒருவரின் தலைமையில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.


போராடும் விவசாய சங்கங்களின் தலைவர்கள் அனைவரையும் பொய் வழக்குகளைப் போட்டு முடக்குவதற்கு பாஜக அரசு முயற்சிக்கிறது. அது கொஞ்சமும் ஏற்கத்தக்கதல்ல. வேளாண் விரோத சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தியும், குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதிப்படுத்தும் சட்டத்தை இயற்ற வற்புறுத்தியும் போராடுகிற விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும், மத்திய அரசின் அடக்குமுறையைக் கண்டிக்கும் வகையிலும்  குடியரசுத் தலைவர் உரையை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி புறக்கணிக்கிறது. போராடும் விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்பது ஒன்றே நாடாளுமன்ற அலுவல்கள் சுமுகமாக நடப்பதற்கு வழிவகுக்கும் என்பதை மத்திய அரசுக்கு சுட்டிக்காட்டுகிறோம்.” என்று திருமாவளவன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
 

click me!