ஜெ. நினைவிடம் கட்ட பாமக வழக்கு போட்டது மறந்துடுச்சா.? புளுகும் எடப்பாடி பழனிசாமி.. திமுக அதிரடி ரியாக்‌ஷன்..!

Published : Jan 28, 2021, 10:07 PM IST
ஜெ. நினைவிடம் கட்ட பாமக வழக்கு போட்டது மறந்துடுச்சா.?  புளுகும் எடப்பாடி பழனிசாமி.. திமுக அதிரடி ரியாக்‌ஷன்..!

சுருக்கம்

‘ஜெயலலிதா நினைவிடம் கட்டக்கூடாது’ என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தவர்கள், பழனிசாமி கூட்டணியில் இன்று இடம்பெற்றுள்ள பாமகவினர் என்பதை ஏனோ பழனிசாமி ‘முழு பூசணிக்காயை சேற்றில் மறைப்பதைப் போல’ பேசியிருக்கிறார் என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.  

இதுதொடர்பாக ஆர்.எஸ்.பாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில், “முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதா நினைவிட திறப்பு விழாவில் உரையாற்றும்போது, உண்மை பேசுவதற்குப் பதிலாக, “ஜெயலலிதாவை நல்லடக்கம் செய்த இடத்தில் நினைவிடம் கட்டக் கூடாது என்று பினாமிகளை வைத்து நீதிமன்றத்தில் வழக்கு போட்டவர்" என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மீது ‘ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்’யாகப் பேசியிருக்கிறார். எம்ஜிஆர் மறைந்தபோது, அவர் அடக்கம் செய்யப்பட்ட நினைவிடத்தை, ஜா-ஜெ. என்ற கோஷ்டி சண்டையில் அம்போ என்று விடப்பட்டபோது, 1989-ல் ஆட்சிப் பொறுப்பேற்ற கருணாநிதி, பெருந்தன்மையோடு எம்.ஜி.ஆர். நினைவிடத்தை பராமரிக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டார் என்பது அனைவரும் அறிந்த ஒன்று.


அதே பெருந்தன்மையோடுதான், ஜெயலலிதா நினைவிடம் அமைக்கும் விவாகரத்தில் நடந்து கொண்ட மு.க. ஸ்டாலின் மீது சேற்றை வாரி இறைப்பதைப் போல பேசியிருக்கிறார் முதல்வர் பழனிசாமி. ஜெயலலிதா நினைவிடம் திறப்பு விழாவிற்கு அழைத்து வரப்பட்ட கூட்டத்தினர், கருணாநிதியின் நினைவிடத்திற்கு, கூட்டம் கூட்டமாய் முண்டியடித்துக் கொண்டு சென்ற காட்சியை கண்டு தாங்கிக் கொள்ள முடியாமல் வயிற்றெரிச்சலின் காரணமாக இப்படி அண்ட புளுகை - ஆகாச புளுகை புளுகியிருக்கிறார் முதல்வர் பழனிசாமி.


தமிழக சட்டப்பேரவையில் ஜெயலலிதா நினைவிடம் அமைப்பது தொடர்பான அறிவிப்பினை அறிவித்தபோதும் சரி - அதற்கு நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் பழனிசாமி அறிவித்தபோதும் சரி, எதிர்க்கட்சித் தலைவரான ஸ்டாலினோ அல்லது திமுக சட்டமன்ற உறுப்பினர்களோ அதற்கு எந்தவித ஆட்சேபணையும் தெரிவிக்கவில்லை என்பது ஊரறிந்த உண்மை. ஆனால், ‘ஜெயலலிதா நினைவிடம் கட்டக்கூடாது’ என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தவர்கள், பழனிசாமி கூட்டணியில் இன்று இடம்பெற்றுள்ள பாமகவினர் என்பதை ஏனோ பழனிசாமி ‘முழு பூசணிக்காயை சேற்றில் மறைப்பதைப் போல’ பேசியிருக்கிறார். இந்த போக்கு ஜெயலலிதாவுக்கு, இவர் செய்கிற பச்சை துரோகம் அல்லவா?
நான்காண்டு காலமாக ஆட்சியில் இருந்த இவர், இதுவரை இதுபற்றி வாய் திறக்காமல், சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், தொடர்ந்து இவர் செய்து வரும் பொய்ப் பிரச்சாரங்களில் இதுவும் ஒன்றாகவே கருத வேண்டியிருக்கிறது. முதல்வர் பழனிசாமியின் இப்போக்கு மிகவும் கண்டனத்திற்குரியது. இனியும் இப்படிப்பட்ட பொய்களை பேசி வருவாரேயானால், அவர் மீது சட்ட நடவடிக்கையை திமுக எடுக்கும் என எச்சரிக்கிறேன்” என அறிக்கையில் ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார்.
 

PREV
click me!

Recommended Stories

தைரியம் இருந்தால் ரூபாய் நோட்டுகளில் காந்தி படத்தை மாற்றுங்க! பாஜகவுக்கு துணை முதல்வர் சவால்!
வேர் இஸ் அவர் லேப்டாப்..? முதல்வர் ஸ்டாலினின் தேர்தல் நாடகம்..! அடித்து ஆடும் இபிஎஸ்!