
இனி வரும் தேர்தல்களில் வெற்றி பெற்று நாங்கள் தான் ஜெயலலிதாவின் உண்மையான வாரிசுகள் என்பதை நிரூபிப்போம் என டி.டி.வி.தினகரன் அதிரடியாக அறிவித்துள்ளார்.
சென்னை அசோக்நகரில் உள்ள நடேசன் சாலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைமை அலுவலகம் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. இதனை அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
இதையடுத்து குத்துவிளக்கு ஏற்றி, அ.ம.மு.க. தலைமை அலுவலகத்தின் செயல்பாடுகளையும் அவர் தொடங்கி வைத்தார். இதன் பின்னர் கட்சி அலுவலகத்தில் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோருடைய படங்களுக்கு டி.டி.வி.தினகரன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
தலைமை அலுவலகத்தில் கட்சி பணிகளையும் அவர் உடனடியாக தொடங்கினார். கட்சி அலுவலகத்தின் வெளியே திரண்டிருந்த தொண்டர்கள் மத்தியில் டி.டி.வி.தினகரன் பேசினார்.
அப்போது எம்.ஜி.ஆர். மறைவுக்கு பின்னர் ஜெயலலிதா தலைமை கழகத்தை பெறுவதற்கும், அ.தி.மு.க.வை தொண்டர்களிடம் மீண்டும் சேர்ப்பதற்கும் ஆழ்வார்பேட்டை அசோக் தெருவில் அலுவலகத்தை தொடங்கினார். அ.தி.மு.க. வையும் மீட்டெடுத்தார். 30 ஆண்டுகளுக்கு பின்னர் ஜெயலலிதா வளர்த்த இயக்கத்தை மீட்டெடுப்பதற்காக அசோக்நகரில் நாம் அலுவலகத்தை திறந்திருக்கிறோம்.
அ.தி.மு.க.வையும், தலைமை கழகத்தையும் மீட்டெடுக்கும் வரை இந்த இடத்தில் அலுவலகம் இயங்கும். தலை நிமிர்ந்த இயக்கமாக வெற்றி நடைபோட்ட இயக்கம், இன்று தத்தி, தத்தி...மண்டியிட்டு அடிமைகளின் ராஜ்ஜியமாக திகழ்கிறது.
மீண்டும் இதை தொண்டர்கள் கையில் சேர்ப்பதற்கு சசிகலா தலைமையில் போராடிக்கொண்டிருக்கிறோம். அ.தி.மு.க. என்ற மக்கள் இயக்கத்தை மீட்டெடுப்பதற்கும், இரட்டை இலையை மீட்டெடுப்பதற்காகவும் நாம் செயல்பட்டுக்கொண்டிருக்கிறோம் என தெரிவித்தார்..
இரட்டை இலையை மீட்டெடுப்பதற்கும், அ.தி. மு.க.வை மீட்டெடுப்பதற்கும் முதல் கட்டமாக ஆர்.கே.நகரில் சுயேச்சையாக போட்டியிட்டு மாபெரும் வெற்றி பெற்றோம். ஆர்.கே.நகரில் நிரூபித்தது போல வரும் தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாம் தான் ஜெயலலிதாவின் வாரிசுகள் என்பதை நிரூபிப்போம் என கூறினார்.
நிச்சயம் நாம் கோட்டையில் கொடி ஏற்றுவோம். மக்கள் விரும்பும் ஆட்சியை நாம் கொடுப்போம். அனைத்து தரப்பினரின் கோரிக்கைகளை நிறைவேற்றி தருவோம் என டி.டி.வி.தினகரன் உறுதியாக தெரிவித்தார்..
சசிகலா புஷ்பா எம்.பி., ஜெயா தொலைக்காட்சியின் தலைமை செயல் இயக்குனர் விவேக் ஜெயராமன், முன்னாள் அமைச்சர்கள் பழனியப்பன், செந்தில்பாலாஜி, இசக்கி சுப்பையா உள்பட பலர் விழாவில் கலந்துகொண்டனர்.