
முதலமைச்சர் உட்பட அமைச்சர்கள் யாரும் தனி விமானம் பயன்படுத்தக் கூடாது என்றும், அமைச்சர்கள் யாருக்கும் புதிய கார்கள் கிடையாது என்றும் கர்நாடக முதலமைசர் குமாரசாமி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
கர்நாடகத்தில் காங்கிரஸ் மற்றும் மஜத கட்சிகள் கூட்டணி அமைத்து, ஆட்சியை அமைத்துள்ளன. கர்நாடகத்தின் புதிய முதலமைச்சராக குமாரசாமி கடந்த மே மாதம் 23–ந் தேதி பதவி ஏற்றுக் கொண்டார். மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வர் துணை முதல்–மந்திரியாக நியமிக்கப்பட்டார்.
இன்னும் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படாத நிலையில் மொத்தம் உள்ள 34 மந்திரி பதவிகளில் காங்கிரஸ் 22 பதவியும், ஜனதா தளம்(எஸ்) 12 பதவியும் பகிர்ந்து கொண்டுள்ளன. அந்த கட்சிகள் இலாகாக்களையும் பரஸ்பரம் புரிந்துணர்வு அடிப்படையில் பகிர்ந்து கொண்டன.
புதிய அமைச்சர்கள் பதவி ஏற்பு விழா வருகிற 6–ந் தேதி நடக்கிறது. இந்த நிலையில் முதலமைச்சர் குமாரசாமி அதிகாரிகளின் ஆய்வு கூட்டங்களை நடத்தி பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார்.
முதலமைச்சர் நடத்தும் ஆய்வு கூட்டங்களில் அதிகாரிகள் செல்போன் கொண்டுவர தடை விதிக்கப்பட்டுள்ளது. முக்கியமான விஷயங்கள் குறித்து விவாதிக்கும்போது அதிகாரிகளின் கவனம் சிதறக்கூடாது என்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குமாரசாமி கூறினார்.
இந்த நிலையில் கர்நாடக அரசின் தேவையற்ற செலவுகளை குறைக்க குமாரசாமி நடவடிக்கைகளை எடுத்துள்ளார். பொதுவாக மாநில முதலமைச்சர் தனி விமானம் மற்றும் தனி ஹெலிகாப்டர்களை பயன்படுத்த முடியும். இதற்கு சட்ட விதிமுறைகளில் அனுமதி உண்டு. ஆனால் முதலமைச்சர் உள்பட யாரும் தனி விமானங்களை பயன்படுத்தக்கூடாது என்று தடை விதித்து குமாரசாமி உத்தரவிட்டுள்ளார்.
அதே நேரத்தில் அவசர காலங்களில் தனி விமானத்தை பயன்படுத்தலாம். மேலும் புதிய பதவிக்கு வரும் மந்திரிகள், வாரிய தலைவர்கள், அரசு உயர் அதிகாரிகள் யாருக்கும் புதிய கார்கள் வாங்கக்கூடாது. ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள கார்களைத் தான் பயன்படுத்த வேண்டும் என்று குமாரசாமி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.