
எப்போது எந்த தேர்தல் வந்தாலும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் வெற்றி பெறும் என்றும், திமுக எதிரிக் கட்சி அல்ல... எதிர்கட்சிதான் என்றும் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைமை அலுவலகத்தை அக்கட்சியின் துணை பொது செயலாளர் டிடிவி தினகரன், சென்னை அசோக் நகரில் இன்று திறந்து வைத்தார்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், அதிமுகவைச் சேர்ந்த 90 சதவிகித தொண்டர்கள் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில்தான் இருக்கிறார்கள் என்றார்.
நாடாளுமன்றம், சட்டப்பேரவை என எப்போது எந்தத் தேர்தல் வந்தாலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் நிச்சயம் வெற்றி பெறும். அதன் மூலம் அதிமுகைவையும், இரட்டை இலையையும் மீட்டெடுத்து ஜெயலலிதாவின் வாரிசுகள் நாம்தான் என்பதை நிரூபிப்போம் என்று கூறினார். தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் நிச்சயம் நல்ல தீர்ப்பு வரும். ஏனெனில் எங்கள் பக்கம்தான் நீதி உள்ளது என்றார்.
சட்டப்பேரவை என்றால் எதிர்கட்சியும் இருக்க வேண்டும்; அதனால்தான் திமுக எம்.எல்.ஏ.க்கள் பேரவைக்கு வந்து ஜனநாயக கடமை ஆற்ற வேண்டும் என்று பேரவைத் தலைவரிடம் கோரிக்கை வைத்தேன். அதனால், திமுக கூட்டாளி என்று சிலர் கூறுகின்றனர். திமுக எதிரிக் கட்சி அல்ல... எதிர்கட்சிதான் என்று தினகரன் கூறினார்.