ஆட்சியைக் கவிழ்க்க சதி... அலறும் முதல்வர்... ஆட்டத்தைத் தொடங்கிவிட்டதா பாஜக?

By Asianet TamilFirst Published Jun 11, 2019, 6:26 AM IST
Highlights

பாஜகவினர் பல்வேறு சமூக ஊடகங்கள் மூலம் பொய்த் தகவல்களைப் பரப்ப கோடிக்கணக்கான ரூபாயைச் செலவழிக்கிறார்கள். மத்திய அரசும், பாஜக தொண்டர்களும்தான் மேற்கு வங்காளத்தில் வன்முறையை தூண்டுகிறார்கள். 

மேற்கு வங்க மாநில ஆட்சியைக் கவிழ்க்க சதி நடப்பதாக மாநில முதல்வர் மம்தா பானர்ஜி காட்டமாகத் தெரிவித்துள்ளார்.


 நாடாளுமன்றத் தேர்தலில் மேற்கு வங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி 22 தொகுதிகளிலும் பாஜக 18 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. தேர்தல் சமயத்திலிருந்தே மாநிலத்தில் நடந்த திரிணாமூல் காங்கிரஸ் - பாஜக தொண்டர்கள் இடையே மோதல் போக்கு இருந்துவருகிறது. தேர்தலுக்கு பிறகு நடந்த மோதலில் 4 பாஜகவினர் கொல்லப்பட்டனர். இதனையடுத்து பாஜக சார்பில் முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதற்கிடையே மாநில ஆளுநர் கேசரிநாத் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசினார்.


மேற்கு வங்க மாநில சட்டம் ஒழுங்கு தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டது. ‘சட்டம் ஒழுங்கை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று வலியுறுத்தியிருந்தது. இதற்கு பதில் அளித்த மாநில தலைமை செயலாளர், ‘மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு கட்டுக்குள் இருப்பதாக’ தெரிவித்திருந்தார். இந்நிலையில், “ஆட்சியைக் கவிழ்க்க சதி நடைபெறுவதாக” முதல்வர் மம்தா பானர்ஜி  தெரிவித்துள்ளார்.
 “பாஜகவினர் பல்வேறு சமூக ஊடகங்கள் மூலம் பொய்த் தகவல்களைப் பரப்ப கோடிக்கணக்கான ரூபாயைச் செலவழிக்கிறார்கள். மத்திய அரசும், பாஜக தொண்டர்களும்தான் மேற்கு வங்காளத்தில் வன்முறையை தூண்டுகிறார்கள். எந்த மாநிலத்திலாவது வன்முறையோ கலவரமோ நடைபெற்றால் அதற்கு மத்திய அரசுக்கும் சமமான பொறுப்பு உண்டு. எனவே மத்திய அரசு தங்களுடைய பொறுப்பை தட்டிக்கழித்துவிட முடியாது.
மேற்கு வங்காளத்தில் வன்முறையைத் தூண்டுவதில் திட்டமிட்ட சதி உள்ளது. நாட்டில் அவர்களுக்கு எதிராக நான் குரல் கொடுப்பதால், என் குரலை முடக்க சதி நடைபெறுகிறது. அப்படியே மாநில அரசையும் கவிழ்த்துவிடலாம் எனச் சதி செய்கிறார்கள். அதன் ஒரு பகுதியாகவே மாநில அரசுக்கு அறிவுரையை அனுப்பியிருக்கிறார்கள். அதற்கெல்லாம் நான் பதில் சொல்லப்போவதில்லை. தலைமைச் செயலாளர் பதில் அனுப்பிவிட்டார்.” என்று மம்தா பானர்ஜி காட்டமாகத் தெரிவித்தார். இதற்கிடையே மாநில உள்துறை அமைச்சர் பார்த்தா சட்டர்ஜி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், கடும் ஆட்சேபங்களை தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையைத் திரும்ப பெறும்படி வலியுறுத்தியுள்ளார். 

click me!