ஒற்றைத் தலைமையை வலியுறுத்தும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள்... மானாவாரியாக கண்டித்த முன்னாள் அமைச்சர்!

By Asianet TamilFirst Published Jun 10, 2019, 10:26 PM IST
Highlights

எம்எல்ஏக்களின் இக்கருத்துக்களால் அதிமுக தலைமைக்கு தர்மசங்கடம் ஏற்பட்டுள்ளது. எம்எல்ஏக்களின் கருத்துகளை ஏற்றுக் கொள்ள முடியாது. இருவரும் வெளியில் கருத்துக்களை கூறியது கண்டிக்கத்தக்கது.
 

ஒற்றை தலைமை குறித்து எம்.எல்.ஏ.க்கள் பொதுவெளியில் கருத்துக்களை கூறியது கண்டிக்கத்தக்கது என அதினுக துணை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான கே.பி. முனுசாமி தெரிவித்துள்ளார்.
 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தோல்வியடைந்ததை அடுத்து, அதிமுகவில் ஒற்றை தலைமை குறித்து மதுரை வடக்கு எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா கருத்து தெரிவித்தார். அதை குன்னம் தொகுதி எம்.எல்.ஏ. ராமச்சந்திரனும் வழிமொழிந்தார். இதுபோன்ற கருத்துகளை பொதுவெளியில் தெரிவிக்கக் கூடாது என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் கூட்டறிக்கை வெளியிட்டிருந்தனர். இந்நிலையில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான கே.பி. முனுசாமி, எம்.எல்.ஏ.க்கள் கருத்து தெரிவித்திருப்பதைக் குறை கூறியுள்ளார்.


இதுதொடர்பாக அவர் கிருஷ்ணகிரியில் அளித்த பேட்டியில், “ஜெயலலிதா மறைவுக்கு பிறகு பிளவுப்பட்டிருந்த அதிமுகவை இணைத்து ஆட்சியையும் கட்சியையும் எடப்பாடி பழனிசாமியும்  ஓ.பன்னீர் செல்வமும் சிறப்பாக நடத்திவருகிறார்கள். அதிமுகவுக்கு ஒற்றை தலைமை வேண்டும் என்று ராஜன் செல்லப்பா தெரிவித்ததை தவிர்த்து இருக்க வேண்டும். அவருடைய கருத்தை  குன்னம் எம்.எல்.ஏ. ராமசந்திரன் வரவேற்றுள்ளார். எம்எல்ஏக்களின் இக்கருத்துக்களால் அதிமுக தலைமைக்கு தர்மசங்கடம் ஏற்பட்டுள்ளது. எம்எல்ஏக்களின் கருத்துகளை ஏற்றுக் கொள்ள முடியாது. இருவரும் வெளியில் கருத்துக்களை கூறியது கண்டிக்கத்தக்கது.
 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தோற்றதால் சோதனைகள் ஏற்பட்டுள்ளது. அதிமுக தொண்டர்களும் நிர்வாகிகளும் இணைந்து செயல்பட்டு ஜெயலலிதாவால் உருவாக்கப்பட்ட  ஆட்சி தொடர வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டு வருகிறார்கள். எம்.எல்.ஏ.க்களின் கருத்துகளால் எதிரிகளுக்கும் துரோகிகளுக்கும் வாய்ப்பையும் சந்தர்ப்பத்தையும் ஏற்படுத்தி தருவதாக அமைந்துவிடும்.” என்று கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார். 

click me!